அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள்

தற்போது பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் சீனா இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மாற்றப்படாது என்றும் பிற சீன முதலீட்டு அபிவிருத்திப் பணிகள் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில், அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்திருந்தாலும், அரசாங்கத்தில் உள்ள மற்றவர்கள் மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

ஆகவே சில நாடுகளின் அழுத்தம் இருந்த போதும், இலங்கையில் உள்ள அனைத்து சீன அபிவிருத்தி திட்டங்களும் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்று வாங் ஜி அவரது விஜயத்தின் போது உறுதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த மாதம் 13ஆம் திகதி இரவு 11.30மணிக்கு இலங்கை வரும் சீன வெளிவிவகார அமைச்சர், 14ஆம் திகதி மதியம் 12.15 மணிக்கு நாட்டை விட்டு வெளியேறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த குறுகிய நேரப் பயணத்தின் போது ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். அத்தோடு மரியாதை நிமித்தமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சீன அதிகாரியாக வாங் ஜி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.