சர்வதேசத்திற்கு நான் அஞ்சவில்லை, இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் – சஜித்

பிரேமதாசவினர் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் அல்ல. சர்வதேசத்தில் எவரொருவரைக் கண்டும் நான் அஞ்சவில்லை இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் என என சிறிலங்கா அரசுத்தலைவர் வேட்பார்  சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசகுறிப்பிட்டார்.இவ்வாறு செய்வதற்கு அவருக்கு வெட்கமில்லையா? முதுகெலும்பு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் கெகிராவ நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த செவ்வாய்கிழமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் முன்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ தலைகுனிய நேர்ந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள்.

அடிப்படைவாதம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைத்து பக்கமும் திரும்பினாரே தவிர, அவரிடமிருந்து பதிலில்லை. இவ்வளவு காலமும் அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்தே பேசிவந்தார்கள். எனினும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மைகள் அனைத்தும் வெளிவந்துவிட்டது.

கடந்த காலத்தில் அவர்கள் யாருக்கு ஜம்பர் அணிவித்து, யாரை சிறையில் அடைத்தார்களோ அவரே போருக்கு தலைமைத்துவம் வழங்கிய யுத்தவீரர் என்று சர்வதேச ஊடகங்களின் முன்நிலையில் அவர்களுடைய வாயாலேயே ஏற்றுக்கொள்ளளும்படி நேர்ந்துவிட்டது.

இராணுவத்தினரை தண்டிப்பார்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றுவார்கள் என்றெல்லாம் கடந்த காலத்தில் கூறினார்கள். அவ்வாறு மின்சாரக்கதிரையில் ஏற்றுவதற்காகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பதில் ‘காட்டிக்கொடுப்பு’. என அவர் மேலும் தெரிவித்தார்.