சம்பந்தன் – சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? – பூமிகன்

கொழும்பு அரசியலை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் ஐ.தே.க. வின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான். இதில் ஒரு முக்கிய திருப்பமாக, “நான்தான் வேட்பாளர்” என அறிவித்துக்கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்தது கடந்த வாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நள்ளிரவையும் தாண்டி அதிகாலை 1.00 மணி வரையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு கள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் இந்த வாரக் கேள்வி. அதற்குப் பதிலைத் தேடுவதற்கு முன்னதாக, இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து பார்ப்போம்.

ஐ.தே.க. தலைமையிலான ‘மெகா’ கூட்டணியை அமைப்பது குறித்து ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிவின்றி முடிந்தது குறித்து கடந்த வாரம் செய்தி வெளிவந்திருந்தது.

யாப்பு குறித்து முழுமையான உடன்பாடு ஏற்படாதததுதான் இதற்குக் காரணம். அதற்கு முன் முக்கியமான மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. கட்சியில் தனக்கு ஆதரவானவர்களுடன் மட்டும் பேசிப் பலனில்லை என்பதால் தன்னை எதிர்ப்பவர்களுடனும் பேசிப் பார்ப்போம் என்ற முடிவில் காய் நகர்த்தியிருக்கிறார் சஜித். அதன் மூலம் கட்சியின் முழு ஆதரவையும் தனக்குச் சார்பாகக் கொண்டுவந்துவிட முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

முதல் நகர்வாக ரணில் விக்கிரம சிங்கவின் தீவிர ஆதரவாளரான ராஜித சேனாரட்ணவையும்,  சம்பிக்க ரணவக்கவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் சஜித். ‘மெகா’ கூட்டணியின் சக்திவாய்ந்த பதவியான செயலாளர் பதவிக்கு ராஜிதவையே நியமிப்பதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார்.Rajitha Senaratne 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped சம்பந்தன் - சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? - பூமிகன்

அந்தளவுக்கு அவர் ரணிலுக்கு நம்பிக்கையானவர். ஆனால், அந்தப் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என சஜித் போர்க்கொடி தூக்கியிருப்பது பழைய செய்தி. இந்தப் பின்னணியில் ராஜிதவுடனான சஜித்தின் சந்திப்பு சுவாரஸ்யமானது. சஜித்தின் அடுத்த நகர்வுக்கும் அதுதான் காரணமாக அமைந்தது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது, தன்னையே சனாதிபதி வேட்பாளராக கட்சி தெரிவு செய்ய வேண்டும் என ராஜிதவிடம் வலியுறுத்தினார் சஜித். இதற்கு ராஜித மிகவும் நிதானமாகப் பதில் கொடுத்திருக்கின்றார். “உங்களுடைய தந்தை ரணசிங்க பிரேமதாச கடுமையாகப் போராடித்தான் சனாதிபதிப் பதவிக்கு வந்தவர். அப்படித்தான் நீங்களும் போராட வேண்டும். அத்துடன் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. நீங்கள் இப்போது அவசரப்படத் தேவையில்லை” என அறிவுரை கூறிய ராஜித மற்றொரு விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.

“சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க.வுக்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு அவசியம். உங்களுக்கு அந்த ஆதரவு இல்லை. உங்களுடன் இருப்பவர்களில் மங்கள சமரவீர மட்டும்தான் சிறுபான்மையினருடைய பிரச்சினைக்கு தீர்வைக் கூறுகின்றார். மற்றவர்கள் அப்படியல்ல.

நீங்களும் அவர்களுக்கான ஒரு தீர்வைக் கூறவில்லை. இதனால், சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவை உங்களால் பெறமுடியாது. அதனால், இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற முடியாது” என சஜித்துக்கு நிலைமைகளை எடுத்துக்கூறிய ராஜித, “அதனால், இந்த முயற்சியிலிருந்து நீங்கள் ஒதுங்கிக்கொண்டு ரணிலுக்கு ஆதரவளியுங்கள்” என ஆலோசனையும் கூறியிருக்கின்றார்.

நிதானமாக அனைத்தையும் அவதானித்த சஜித், “சரிதான். நான் பார்க்கிறேன்” என அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  போனதுடன் சும்மா நிற்கவில்லை. உடனடியாகவே மங்கள சமரவீரவைத் தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு ஏற்பாடு செய்தார் என உள்ளக வட்டாரங்கள் சொல்கின்றன. இது குறித்து அமைச்சர் மனோ கணேசனுடனும் மங்கள ஆலோசனை நடத்தியிருக்கின்றார். “நல்ல விஷயம். மனம் விட்டு பேசுங்கள்”  என இதற்கு மனோ பதிலளித்திருக்கின்றார். ஐ.தே.க.வின் சார்பில் சஜித் களமிறங்குவதைத்தான் மனோவும் விரும்புவதாகத் தெரிகின்றது.

உடனடியாகவே சந்திப்புக்கான ஏற்பாடு மங்களவினால் செய்யப்பட்டது. சம்பந்தனை சந்தித்து “தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஆறு மாதத்தில் தீர்வு தருவேன்” என்றும் சொல்லிவிட்டார் சஜித். ஆனால், பிரச்சினை என்ன? தீர்வு என்ன? என்பதற்கான விளக்கத்தை அவரால் சொல்ல முடியவில்லை. மக்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சஜித் வருவதற்கு முன்னர் மங்களதான் கூட்டமைப்பின் மூவர் குழுவுடன் விரிவாகப் பேசியிருக்கின்றார். சம்பந்தனுடன், மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும் இந்தப் பேச்சக்களில் கலந்துகொண்டிருந்தார்கள்.Sumanthiran Samanthan Mavai 0 சம்பந்தன் - சஜித் பேசியது என்ன? சனாதிபதி வேட்பாளராவது யார்? - பூமிகன்

எதிர்த் தரப்பான பொதுஜன பெரமுனையின் சார்பில் களமிறங்கும் கோத்தபாய ராஜபக்‌சவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகளவு ஆதரவிருப்பதாகச் சுட்டிக்காட்டிய மங்கள, சஜித்தை களமிறக்கினால் மட்டும்தான் தம்மால் அதனை ஈடுகொடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாடு முழுவதிலும் தாம் நடத்திய துல்லியமான ஆய்வுகளின் மூலமாக இந்தத் தகவல்கள் தம்மால் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ரணிலைக் களமிறக்கினால் தோல்வி தவிர்க்க முடியாதது என்பதால்தான், சஜித்தை களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத்தான் வந்திருப்பதாகவும் மங்கள விளக்கிக் கூறியிருக்கின்றார். அதனால், கூட்டமைப்பும் சஜித்தை ஆதரிக்க முன்வர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு 10.00 மணியளவில் மங்களவின் இல்லத்துக்கு வந்த சஜித், அதிகாலை 1.00 மணி வரையில் கூட்டமைப்பின் மும்மூர்த்திக ளுடனும் பேசியிருக்கின்றார்.

“தேர்தல் குறித்த அறிவிப்பு முதலில் வரட்டும், நீங்களும் உள்களுடைய வேட்பாளர் யார் என்பதை அறிவியுங்கள். உங்களிடமுள்ள தீர்வு என்ன என்பதையும் சொல்லுங்கள். நாங்களும் எங்கள் பாராளுமன்றக் குழுவையும், ஒருங்கிணைப்புக் குழுவையும் கூட்டி எங்கள் முடிவை அறிவிக்கின்றோம்” என்ற வகையில் சம்பந்தன் பதிலளித்து சந்திப்பை முடித்துக்கொண்டார்.

ஐ.தே.க. சஜித்தை களமிறக்கினால் கூட்டமைப்பு ஜே.வி.பி. வேட்பாளரை ஆதரிக்கும் என கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் சொல்லியிருக்கும் பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.

2015 சனாதிபதித் தேர்தலிலும் இதேபோன்ற ஒரு பிரச்சினை உருவானது. ரணில் தான் களமிறங்க முற்பட்டபோது பொது வேட்பாளராக மைத்திரியை களமிறக்கினால்தான் மகிந்தவை தோற்கடிக்க முடியும் என சந்திரிகா முன்வந்தார். இதனை ரணில் திட்டவட்டமாக நிராகரித்தார்.

ரணிலை சமாளிக்க சம்பந்தனையே சந்திரிகா பயன்படுத்தினார். சம்பந்தனை வீடு தேடிச் சென்று சந்தித்த சந்திரிகா இது குறித்து பேசினார். அதனையடுத்தே ரணிலைச் சந்தித்த சம்பந்தன், “நீங்கள் தோல்வியடைந்து மீண்டும் ராஜபக்‌ச ஆட்சி வருவதற்கு வழிவகுக்கப்போகின்றீர்களா?” என கேட்டதையடுத்தே ரணில் ஒதுங்கிக்கொண்டார். இது பழைய செய்தி.

இப்போதும் அதேபாணியில் சம்பந்தனின் ஆதரவைப் பெற்று அதன் மூலமாக ரணிலை ஒதுங்கிகொள்ளச் செய்ய முடியும் என மங்கள முற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. மங்களவைப் பொறுத்தவரையில், இது போன்ற நெருக்கடியன நேரங்களில் இராஜதந்திரமாக காய் நகர்த்துவதில் வல்லவர். 2015 ஆட்சி மாற்றத்திலும் அவரது பங்களிப்பு கணிசமானதாக இருந்தது.

இப்போது சஜித்துக்கு ஆதரவாக அவர் களமிறங்கிய போதே ரணீலின் முகாம் ஆட்டங்காணத் தொடங்கியது. மாத்தறையில் சஜித்துக்கு ஆதரவான கூட்டத்தை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியவரும் மங்களதான். அங்கு உரையாற்றிய அவர், “ரணிலின் ஆசீர்வாதத்துடன் சஜித்தான் சனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்” என பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் சொல்லியிருக்கின்றார்.

ஆனால், இந்தத் தருணம் வரையில் விட்டுக்கொடுப்பதற்கு ரணில் தயாராகவில்லை. அதன்மூலம் தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என அவர் அஞ்சுகின்றார். இதனால், ஐ.தே.க. ஆதரவாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அடுத்த வாரத்துக்குள் நெருக்கடி முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், என்ன முடிவு என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை!