சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சிறீலங்கா வருகின்றது சீனா இராணுவம்

சிறீலங்கா அரசின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் 2.6 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 100 இராணுவ ஜீப் வண்டிகளையும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேன நேற்று (14) சீனா அதிபரை சந்தித்த போது சிறீலங்கா எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகளை எடுத்துக் கூறியதுடன் சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேசமயம் இரு நாடுகளும் படைத்துறை ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிலும் சீனா அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் மைத்திரிபால சிறீசேன ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

சமூகவலைத்தளங்களால் வன்முறைகள் ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த தம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனவும் தெரிவித்த மைத்திரி அதனை கட்டுப்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிறீலங்காவில் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்த சீனாவின் படைத்துறை நிபுணர்களை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கு சீனா அதிபர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

எனவே சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை சிறீலங்கா விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.