சத்தமின்றி நடக்கும் இன அழிப்பு யுத்தம் – தீபச்செல்வன்

அண்மையில் கிளிநொச்சியில் நடந்த இரட்டைக் கொலை கிளிநொச்சியை மாத்திரமல்ல, முழு ஈழத்தீவையுமே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போருக்குப் பிறகு, கிளிநொச்சி குறித்தும் வடக்கு கிழக்கு குறித்தும் அவ்வப்போது இத்தகைய செய்திகள் வெளியாகின்றன.

2009இற்கு முன்னரான காலத்தில், அதாவது விடுதலைப் புலிகளின் காலத்தில் வீரத்தையும் சாதனைகளையும் எடுத்தியம்பிய இம் மண்ணில் இன்று இத்தகைய செய்திகள் வெளி வருகின்றமை எதேச்சையானதா?
2009 உடன் போர் முடிந்துவிட்டது என்றே சொல்லப்படுகின்றது.

இப்போதுதான் வடக்கு கிழக்கில் அமைதி நிலவுகின்றது என்று ஆளும் சிங்கள அரசுகள் கூறி வருகின்றன. இப்போதுதான் வடக்கு கிழக்கில் போக்குவரத்துக்கள் இயல்பாக நடப்பதாகவும் சொல்லுகின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் இயல்பாக சட்டவிரோத போதைப் பொருட்களும் வந்து சேருகின்றது என்பதை இலங்கை அதிபர்கள் சொல்லுவதில்லை. போருக்குப் பிறகும் வடக்கு கிழக்கில் உயிரிழப்புக்கள் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சில வருடங்களின் முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் காவல்துறையினர் இவ்வாறு படுகொலை செய்திருந்தனர்.
ஆவாக் குழு என்பது ஆமிக்குழுவே. அது அரசியல் காரணங்களுக்காக சிங்கள அரசால், குறிப்பாக கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட குழு.

வடக்கு கிழக்கில் வன்முறை நிலவுகின்றது. வன்முறை இளைஞர் குழுக்கள் உள்ளன. எனவே இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லுவதற்காக சிங்கள அரசும் இராணுவமும் உருவாக்கியதே ஆவாக் குழு.

அதற்கு ஊடகங்களும் கவனத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. உலகின் மிகச் சிறந்த விடுதலை இயக்கத்தை, வீரமான ஒரு அமைப்பை அழித்த சிங்கள அரசுக்கு ஏன் ஆவாக் குழுவை அடக்க முடியவில்லை? விடுதலைப் புலிகள் மீள உயிர்க்கிறார்கள் என்று கதைவிட்டு, ஈழத் தமிழ் இளைஞர்களை அழிக்கிற, ஒடுக்கிற அரசுக்கு இதனை ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா? கிளிநொச்சியில் இரட்டைக் கொலை செய்தவர், கஞ்சா போதைப் பொருளை உட்கொண்டிருந்தார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.gty marijuana joints ll 130904 16x9 992 சத்தமின்றி நடக்கும் இன அழிப்பு யுத்தம் - தீபச்செல்வன்

வடக்கு கிழக்கில் இன்றைக்கு கஞ்சாவும் கத்தியும் வருவதற்கும் அந்தக் கலாசாரம் மேலோங்குவதற்கும் யார் காரணம்? வடக்கு, குறிப்பாக யாழ்ப்பாணம் இன்று கஞ்சா கைமாற்றப்படும் பகுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் பேருந்துகளிலிருந்து கஞ்சா கொண்டு செல்லப்படுகின்றது. இதில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்கும் வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது.
ஈழத்தைப் பொறுத்த வரையில், இன்றைக்கு சட்டவிரோத போதைப் பொருட்கள் மையம் கொள்ளுவதற்கு சிங்கள இராணுவமும் காவல்துறையுமே காரணம்.

கிளிநொச்சியில் ஒருமுறை சிறுவன் ஒருவன் போதைப் பொருளுடன் மக்களால் பிடிக்கப்பட்டான். போரில் தாய் தந்தையை இழந்த அவன், இராணுவ முகாம் ஒன்றுக்கு போதைப் பொருளை கடத்திச் செல்லுகையில், வீடு ஒன்றுக்குள் நுழைந்து திருடவும் முற்படுகையில் மக்களால் பிடிக்கப்பட்டான். போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களின் பாடசாலைக் கல்வி குழப்பட்டு, அவர்கள் போதைப் பொருள் சுமக்கும் சிறுவர் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள், கல்வி கற்கவும் தமது ஆளுமையை வளர்க்கவும் சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை, குருகுலம் என சிறுவர் இல்லங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்தன. காந்தரூபன் அறிவுச்சோலை முதலாவது ஆண்டு நிறைவில் கலந்து கொண்ட, தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்ட ஈழ மண்ணின் செடிகள், கல்வி, ஆளுமை, அறநெறி கொண்ட முழு மனிதர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுச்சோலையை உருவாக்கியதாக கூறுகின்றார்.chencholai சத்தமின்றி நடக்கும் இன அழிப்பு யுத்தம் - தீபச்செல்வன்

சிறுவர்களை பாதுகாத்து, அவர்களை நெறிமுறை பிறழாமல் ஈழ மண்ணின் ஆளுமைகளாக, அறநெறி கொண்ட முழு மனிதர்களாக உருவாக்கிய அத்தகைய கட்டமைப்புக்களை உருவாக்கிய விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறி, சர்வதேச ஆதரவுடன் அழித்தொழித்த சிங்கள அரசு, இன்று ஈழ மண்ணில் தாம் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் சிறுவர்கள் குற்றவாளிகளாக அதிகரிக்கும் ஒரு சூழலைதான் சிங்கள அரசு உருவாக்கியுள்ளது. இதனைத்தான் போருக்குப் பிந்தைய அழகிய காலம் என்றும் சிங்கள அரசு சொல்கின்றது.

இந்த விசித்திரத்தில்தான் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதைப் பொருளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த முனைகின்றார். குளவிகளைக் கொல்லவும், யானைகளை கொல்லவும், நாய்களைக் கொல்லவும் தடையுள்ள நாட்டில், ஈழத் தமிழர்கள் மாத்திரம் கொல்லப்பட்டலாம். போரின் இறுதியில் சரணடைந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்று சிங்கள அரசு வாய் மூடி இருக்கிறது.

அதிபர் சிறிசேன வாய் திறக்கிறார் இல்லை. லட்சம் பேரை அழித்து, பல ஆயிரம் பேரை காணாமல் ஆக்கிய அரசில் அதிபராகவும் பிரதமராகவும் இருப்பவர்களுக்கு தானே முதலில் மரண தண்டனை விதிக்க வேண்டும்.அண்மையில் சிறிசேனவின் மரண தண்டனைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் 18 மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் பதினாறு பேர் தமிழ் பேசுபவர்கள். நான்கு பேர் சிங்களவர்கள். ஆறு தமிழர்களும் ஆறு முஸ்லீம்களுமாய் 16 தமிழ்பேசுவோர். தமிழர்கள் சிறுபான்மையராக உள்ள நாட்டில் சிறிசேனவின் மரண தண்டனைப் பட்டியலில் மாத்திரம் தமிழர்களுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியில், அரசியலில் மிகவும் குறைந்த இடமே உள்ள ஈழத் தமிழர்களுக்கு மரண தண்டனைப் பட்டியலில் மாத்திரமே அதிக இடம். இதுதான் சிங்களம்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தி, அவர்கள் சிறுவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வேலைகளை செய்துவிட்டு, அதே இராணுவம் போதை இறங்க விழிகளுடன் வந்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து வகுப்பு எடுக்கின்றனர். எமது தலைமைகளும் இது தொடர்பில் மௌனம் காக்கின்றன.

அரசியல் தலைமை, நிர்வாகம், சமூகம் என அனைத்து மட்டத்திலும் விழிப்பும் அர்த்தபூர்வமான செயற்பாடுகளுமே எமக்கு அவசியம் ஆகும். யுத்தம் என்பது சத்தத்துடன் மாத்திரம் நிகழ்வதல்ல, கத்தியின்றி, இரத்த மின்றியும் நிகழும் என்பதற்கு ஈழம்தான் எடுத்துக்காட்டு. ஒரு புறம் போதைப் பொருளுக்கு எதிராக பேசிக் கொண்டு, மனித விரோத செயல்களை செய்துவிட்டு, மரண தண்டனை பற்றிப் பேசிக் கொண்டு, அதே போதைப் பொருளால் வடக்கு கிழக்கில் இன அழிப்பு யுத்தம் செய்கின்றது சிங்கள அரசு. போராளிகளின் ஈகத்தால் பெருமை பெற்ற மண்ணின் வரலாற்றை மாற்றத் துடிக்கின்ற வரலாற்று ரீதியான, இன ரீதியான அழிப்புக்கான நுண் செயற்பாடுகளே இவை.