சட்டவிரோதப் படுகொலைகளை இலங்கை நிறைவேற்றியது; சாடுகிறது அமெரிக்கா

இலங்கை அரசால் சட்டவிரோதப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரச முகவர்கள் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

இவ்வாறு பலவிதமான குற்றச்சாட்டுக்களை இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

இலங்கையில் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் நியாயப்படுத்த முடியாத விதத்தில் கைது செய்யப்படுவது, சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது போன்றன காணப்படுகின்றன. அதேவேளை, பொலிஸார் தொடர்ந்தும் பொதுமக்களைத் துன்புறுத்துகின்றனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரைப் பொறுப்புக் கூறச் செய்வதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நடை முறைப்படுத்தவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது. அரச தரப்பினரும் நீதித்துறையினரும் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் என்று சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. மனித உரிமைகள் அமைப்பினர் வழங்கியுள்ள பேட்டிகளின்போது இலங்கையில் சித்திரவதைகளும் அளவுக்கதிகமான பலப்பிரயோகமும் காணப்படுவது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி கண்மூடித்தன மாகக் கைதுசெய்து தடுத்துவைத்தலும் தொடர்கின்றமையை அறியமுடிந்துள்ளது” என்றுள்ளது.