சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா – போர்க்குற்றவாளிகளை மீண்டும் நியமிப்பதில் சிறீலங்கா அரசு தீவிரம்

முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு கோரி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டட மகஜரை சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் M.R மாரசிங்க, தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை நாடாளுமன்றத்தில் கையளிக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

ஜனாதிபதி இந்த மகஜரை பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ நேரத்தையும் ஒதுக்கி கொடுக்கவில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தரும்போது குறித்த மகஜரை கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை ஒருமுறை நியமித்துப் பார்க்குமாறு குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை நீக்கியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல்துறை திணைக்களத்தையும் கொண்டு வந்திருந்தார்.

எனினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி காவல்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்ல, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குள்ளேயே இருக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு ஐ.தே.க முன்னணியினர் விடுத்துவரும் கோரிக்கையை மறுத்துவரும் ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தையும் கொண்டு வருவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜனவரி மாதம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்லா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 58 ஆவது படையணியை வழிநடத்திய அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரபாத் பலுத்வற்ற மீண்டும் பணியில் கடந்த 11 ஆம் நாள் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார், தற்போது பொன்சேக்கா பணியில் அமர்த்தப்படவுள்ளார். போர்க்குற்றவாளிகளின் இந்த நியமனங்கள் சிறீலங்கா அரசு அனைத்துலக சட்டவிதிகளை முற்றாக மதிக்கவில்லை என்பதையே காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.