சஜித்தின் பிரசாரக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கொழும்பு காலிமுகத்திடலில் நேற்றைய தினம் (10) பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற போதிலும், அங்கு தமிழும் தமிழ்ப் பிரதிநிதிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல இலட்சக் கணக்கான ஆதரவாளர்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், நாட்டிலுள்ள பெரும்பாலானோரின் கவனத்தையும் ஈர்த்தது.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக அன்னச் சின்னத்தில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசாவின் பிரமாண்டமான முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இலத்திரனியல் அறிவிப்பு காட்சிப் பலகையில் மட்டும் தமிழ் மொழி காட்சிப்படுத்தப்பட்டதே தவிர வேறு எங்கும் தமிழிற்கு முன்னிலை வழங்கப்படவில்லை.

பிரதான மேடையில் காட்சிப்படுத்தப்பட்ட அறிவிப்புப் பலகையில்கூட சிங்கள மொழிக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி காட்சிப்படுத்தப்படாமையைக் கண்டு ஏமாற்றம் அடைந்த தமிழ்ச் சமூகம் மற்றுமோரு விடயத்திலும் பாரிய ஏமாற்றத்தைச் சந்தித்தது.

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட சஜித் பிரேமதாசாவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலே, சிங்கள மொழி மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே பிரச்சார உரை நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தில் ரவி கருணாநாயக்க, நவீன் திஸநாயக்க, சந்திராணி பண்டார, அகில விராஜ் காரியவசம், தம்பர அமில தேரர், ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, ஹரின் பெர்னான்டோ, பாட்டாளி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனரத்ன, விஜித் விஜயமுனி சொய்ஸா, ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் உரையாற்றினர்.

ஆனால் இவர்களின் கட்சியில் மனோ கணேசன், இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம், எம்.திலகராஜ், வேலுகுமார் அரவிந்தகுமார், ரிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம், முஜுபுர் ரஹுமான், எஸ்.எம்.மரிக்கார், விஜயகலா மகேஸ்வரன், அலிசாகிர் மௌலானா, மொஹமட் மன்சூர், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், அப்துல்லா மஹரூப் இம்ரான், டி.எம்.சுவாமிநாதன் ஆகிய தமிழ் பிரதிநிதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே தமிழர்களைப் புறக்கணிக்கும் சஜித், ஆட்சிக்கு வந்தால், தமிழர்களின் நிலை என்னவாகும் என்பதை கூறத்தேவையில்லை என அவதானிகள் கூறுகின்றனர்.