சகாதேவனை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை செய்துள்ளது – அருட்தந்தை சக்திவேல்

முத்தையா சகாதேவன், இயற்கையாக உயிரிழந்துள்ளதாக மரண அத்தாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவரை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை செய்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பு குற்றஞ்சுமத்துகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், தமது வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை பிணையில் கூட விடுவிக்க முடியாத நிலையில் அந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமையினால், அந்த சட்டமானது மிகவும் பாரதூரமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், தம்மீதான நம்பிக்கையை இழந்து விரக்தியுற்ற நிலையில் உளரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கி நோய்வாய்க்கு உட்பட்டு, உயிரிழக்கும் நிலைக்கு அவர்களை அரசாங்கம் தள்ளுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டியது கட்டாயம் என சர்வசேத சமூகம் வலியுறுத்தி வருகின்ற பின்னணியில் கூட அதனை நீக்காது தொடர்ச்சியாக அந்த சட்டத்தை அமுல்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம் ஒரு பயங்கரவாத அரசாங்கம் என அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்துகின்றார்.