கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? – பூமிகன்

இலங்கை அரசியலில் இப்போது அனைத்துத் தரப்பினரதும் பார்வை கோத்தபாய ராஜபக்சவின் பக்கமே திரும்பியுள்ளது. இன்றைய தினத்தில் சனாதிபதித் தேர்தல் ஓட்டத்தில் வெற்றிபெறக் கூடிய ஒரே குதிரை என்றால் கோத்தாதான் என்ற கருத்து அனைத்துத் தரப்பினரிடமும்  உள்ளது.

குறிப்பாக கடும்போக்குள்ள சிங்கள மக்கள் அவரைத் தமது பாதுகாவலனாகக் கருதுகின்றார்கள். அவருக்கிருந்த செல்வாக்கு 21-4 க்குப் பின்னர் மேலும் அதிகரித்திருப்பதையும் காணமுடிகின்றது. சிங்கப்பூரில் சிகிச்சைக்காகச் சென்ற அவர் எப்போது திரும்புவார்? வந்தவுடன் என்ன அறிவிப்பை வெளியிடுவார்? என்பதையிட்டு அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

கோத்தாதான் சனாதிபதி வேட்பாளர் என்பதை அவர் சார்ந்த சிறீலங்கா பொது ஜன பெரமுன இன்றுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அதனை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளையே பெரமுனவில் காணமுடிகின்றது. ஆகஸ்ட் 11 ஆம் திகதி இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அன்றைய தினத்தில்தான் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்தக் கட்சியின் தலைமைப் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றார். அந்தத் திகதியிலிருந்து சனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகளை பெரமுன ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோத்தா களத்தில் இறங்கப்போவதாகக் கூறிக்கொண்டாலும், அவருக்கான ‘கடிவாளம்’ இப்போதும் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. கோத்தா களமிறங்கவேண்டுமானால், அமெரிக்க பிரசாவுரிமையைத் துறக்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை அவர் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏற்கனவே கையளித்துவிட்டார். விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தூதரக வட்டாரங்கள் சொல்கின்றன. ஆனால், அதற்கான பதில் எப்போது கிடைக்கும் என்பதற்கு உறுதியான பதில் இல்லை.

ஆனால், கோத்தாவைக் களமிறக்குவதற்கான செயற்பாடுகள் சூடுபிடிக்க, தமது “பரிசீலனை”யை விரைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்படும் என கோத்தா தரப்பினர் நம்புகின்றார்கள். கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் 12 வழக்குகள் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது மகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு உட்பட இறுதியாக யஸ்மின் சூக்கா தலைமையிலான அமைப்பின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவரை அனைத்துமே பாரதூரமானவைதான். சனாதிபதித் தேர்தலில் கோத்தா களமிறங்குவதைத்  தடுப்பதை இலக்காகக் கொண்டவையாகவே இந்த மனுக்கள் உள்ளன என்பதிலும் சந்தேகமில்லை.z p04 Lasantha’s1   கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? - பூமிகன்

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கோத்தாவுக்கான குடியுரிமையை ரத்துச் செய்வதை அமெரிக்கா தாமதப்படுத்தலாம் என்று ஒரு கருத்துள்ளது. இந்த மனுக்களைத் தாக்கல் செய்தவர்களும் அவ்வாறுதான் எதிர்பார்க்கின்றார்கள். கோத்தா களமிறங்குவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டுதான் இந்த வேளையில் ஒரேயடியாக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், அவ்வாறு தாமதப்படுத்தி கோத்தா போட்டியிட முடியாத ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டால், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அலையை ராஜபக்ச தரப்பு உருவாக்கிவிடலாம் என்பதிலும் அமெரிக்கா அவதானமாக இருக்கும். அது ஐ.தே.க. தரப்பில் போட்டியிடுபவரைப் பாதிக்கும். அதனால், இந்த விவகாரத்தை அமெரிக்கா நிதானமாகவே கையாள வேண்டியிருக்கும் என இராசதந்திர வட்டாரங்களில் ஒரு கருத்துள்ளது.

வாசிங்டனிலிருந்து இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்கா வெளிவிவகார அமைச்சின் உயர் மட்டக்குழு இப்போது கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது பேசப்பட்டாலும், நடைபெறப்போகும் சனாதிபதித் தேர்தல் – கோத்தாவின் குடியுரிமைப் பிரச்சினை போன்றன குறித்தும் முக்கியமாக ஆராயப்படுகின்றது.Gota 2 0   கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? - பூமிகன்

கோத்தாவுக்கான ஆதரவு எப்படியுள்ளது என்பதை இந்தச் சந்திப்புக்களின் போது அவர்கள் அறிந்துகொள்ள முற்படுகின்றனர். மறுபக்கத்தில் “அவரது குடியுரிமைப் பிரச்சினை” தீர்க்கப்பட்டுவிடுமா என்பதை அமெரிக்க குழுவினரிடமிருந்து அறிந்துகொள்ள அரசியல் தலைவர்கள் முற்படுகின்றார்கள். குடியுரிமையைத் துறப்பதற்கான விண்ணப்பத்தை அவர் கையளித்துவிட்டாலும், இன்னும் அதற்குச் சாதகமாகப் பதிலளிக்கப்படவில்லை.

கோத்தாவைப் பொறுத்தவரையில் பல தடைகளையும் தாண்டித்தான் இந்தத் தேர்தலில் அவர் களமிறங்க வேண்டியிருந்தது. முதலில் – குடும்பம், உட்கட்சிப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினை – அதாவது அமெரிக்க விவகாரம் என பல தடைகளை அவர் ஒவ்வொன்றாகத் தாண்டவேண்டியிருந்தது.

குடும்பத்தில் அவருக்குத் தலையசைத்துவிட்டாலும், முழு அளவிலான ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் தகவலறிந்தவர்கள். தேர்தல் களத்தில் இறங்குவதற்கான வேலைகளைப் பாரிய அளவில் கோத்தா ஆரம்பித்துவிட்ட நிலையில் குடும்பத்தினால்  அதனைத் தடுக்கமுடியவில்லை. அதனைவிட குடும்பத்தில் அவரைவிட பலமான ஒருவர் இல்லை என்பதும் அவரது கோரிக்கைக்கு தலையசைக்க வேண்டிய நிர்ப்பந்தம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டமைக்கு காரணம். கூட்டு எதிரணியில் வாசு, திஸ்ஸ குழுவினர் கோத்தாவுக்கு எதிரான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள். அவர்களையும் ஒவ்வொருவராக அழைத்துப்பேசி தலையசைக்க வைத்துவிட்டார் கோத்தா.

அதாவது, குடும்பம் – கட்சி என்ற இரு தடைகளையும் அவர் தாண்டிவிட்டார். மூன்றாவது தடையாக இருப்பது அமெரிக்க குடியுரிமைப் பிரச்சினைதான். குடியுரிமைப் பிரச்சினையைக் கையாள்வதிலும் அமெரிக்காவுக்குச் சில அழுத்தங்கள் நிச்சயமாக இருக்கின்றது. அதனை இலக்காகக் கொண்டுதான் இந்தனை வழக்குளும் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்விடயத்தை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் கண்காணித்துக்கொண்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து யாழ். சென்ற உயர் குழுவை சந்தித்த சி.வி.விக்கினேஸ்வரன்கூட, கோத்தாவுக்கு எதிராக பல வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அமெரிக்க குடியுரிமையை வாபஸ் பெறுவதோ சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதோ அவருக்கு சாத்தியமாகாது எனக் கூறியிருக்கின்றார்.

ஆனால், கோத்தாதான் சனாதிபதி வேட்பாளர் என்ற வகையிலான பிரச்சாரங்கள் அரசியலரங்கில் சூடாகப் பேசப்படுகின்றது. கோத்தாவின் முடிவு ஐதேக எடுக்கப்போகும் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக, இலங்கையின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அடுத்த மாதம் அமையும்.