கொரோனா தொடர்பாக வடமாகாணத்திற்கு ஒரு செயலணி வேண்டும் என்கிறார் சிவமோகன்

வடமாகாணத்திற்கு கொரோனா தொற்று தொடர்பாக ஒரு செயலணி வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தொரிவித்தார்.

இன்று வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள், பேருந்துகளில் பல முகாம்களிற்கு கொண்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது ஒரு நல்ல விடயம். இவ்வாறு பேருந்துகளில் சந்தேகத்திற்கு உரியவர்களை ஏற்றிச்செல்லும் போது முறையாக அழைத்து செல்ல வேண்டும்.

இன்றைய தினம் பேருந்துகளில் அழைத்து சென்ற போது பேருந்துகளின் ஜன்னல்கள் திறந்த நிலையில் சென்றதுடன் சரியான பாதுகாப்பு முறையில் செல்லவில்லை. எனவே இவர்கள் இந்த ஜன்னலின் ஊடாக துப்பினாலோ, வாந்தி எடுத்தாலோ அவை கூட எமது பிரதேசங்களில் அநாவசிய தொற்றுக்களை ஏற்படுத்தலாம். இப்படியான விடயங்கள் எமது வடமாகாணத்தை பாதிக்கும். இவ்வாறு கொரோனா தொற்று என சந்தேகத்தில் கொண்டு வருபவர்கள் யார் எங்கிருந்து வருகின்றார்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், என்பவற்றை சுகாதார திணைக்களங்கள் அறிந்து கொள்ளாமலே இருக்கின்றது.

அனைத்து விடயங்களையும் இராணுவமே பார்க்கின்றது. இது ஒரு தவறான விடயம். இங்கு சுகாதார திணைக்களம் இருக்கின்றது,சுகாதார அமைச்சு இருக்கின்றது. ஒரு சுகாதார அமைச்சு தேசிய செயலணி ஊடாக நடைமுறைப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து மக்களிடத்தே பாரிய ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.

தேசிய ரீதியில் செயலணி ஒன்று இருந்தாலும் மாகாண ரீதியில் செயலணி ஒன்று உருவாக்கப்படாமல் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஒரு கூட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார். அங்கு சகல சுகாதார திணைக்களத்தை சேர்ந்தவர்களை அழைத்திருந்தார். இருந்தபோதும் அக்கூட்டத்தில் இராணுவத்தினரை காணவில்லை.

இதேபோன்று மீண்டும் இராணுவத்தினர் ஒரு கூட்டத்தை கூட்டுவார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் ஒரு கூட்டத்தை கூட்டுவார்கள். இது ஒரு அரசியல் சம்மந்தமான விடயமாக மாறிவிடும். இது ஒரு நோய் சம்மந்தப்பட்ட விடயம் மக்கள் சம்மந்தப்பட்ட விடயம் எனவே பொதுவான ஒரு செயலணி வடமாகாணத்திற்கு என்று உருவாக்கப்படாதவிடத்து வடமாகாணம் ஒரு பாரிய பாதிப்பை சந்திக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே என்னுடைய வேண்டுகோள் தேசிய செயலணியின் ஆலோசனையின் கீழ் வடமாகாணத்திற்கான செயலணி உருவாக்கப்பட வேண்டும். இச்செயலணியில் அரசாங்க அதிபர்கள், சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் அனைவரும் உள்ளடக்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு ஊடகவியலாளர்களை அழைத்து சந்தேகங்கள் எதுவும் இருந்தால், அதனை தெளிவுபடுத்தினால் குழப்பநிலை ஏற்படாது. இதன் மூலம் வடமாகாணத்தில் நோயை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க போகின்றோம். எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்க போகின்றோம் அதற்கான தீர்வு என்ன.

என்னென்ன பிழையான விடயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதனை எவ்வாறு தீர்க்கப்போகின்றோம் என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

வடமாகாணத்தில் ஒரு நோயாளியும் இல்லாத நிலையில் ஒரு நோயாளி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தோடு 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும் எமக்கொரு சவாலாக அமைகின்றது.

வரும் முன் காப்போம் என்ற திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்காதவிடத்து தேசிய தொற்று நோயியல் பிரிவில் எமது நோயாளிகளை உள்வாங்கப்பட முடியாத நிலை ஏற்படும் இடத்து எமது நோயாளிகளை பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்ற கோள்வி எழுகின்றது. எனவே மூடு மந்திரம் இல்லாமல் இந்த அரசு வெளிப்படையாக செயற்பட வேண்டும்