கொரோனா தடுப்பு மருந்து – மனிதர்களில் பரிசோதனை ஆரம்பம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசிப் பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, மனிதர்களுக்குப் போடப்பட்டது.

இந்தத் தடுப்பூசியின் பெயர் எம்ஆர்என்ஏ- 1273 ஆகும். இதை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இவர்களுடன் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த மாடர்னா என்னும் பயோடெக்னாலஜி நிறுவனப் பணியாளர்களும் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

இதற்காக முதலில் 18 முதல் 55 வயதில் இருக்கும் ஆரோக்கியமான தன்னார்வலர்கள் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை முயற்சியாக தடுப்பூசி போடப்பட உள்ளது. பின்னர் 6 வாரங்களுக்கு இவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவர். முதல்கட்டமாக, பெண் ஒருவருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி சரியான முறையில் வேலை செய்கிறதா, பாதுகாப்பானதா என்று பலகட்ட முறைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கொரோனா தடுப்பூசி சந்தைகளில் கிடைக்க ஓராண்டில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸுக்குத் தனியாக இதுவரை எந்தவொரு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.