கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

ஒரு பெரிய குண்டினுள்  பல சிறிய குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளவையே கொத்து எறிகுண்டுகள் ஆகும்.

தாக்கும் இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் ஏவப்படும். என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்த பின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்குள்ளாகும். ஒரே இலக்கின் பல இடங்களைத் தாக்கும் தன்மை இந்தக் குண்டுகளுக்கு உள்ளது.

ஆட்களை தாக்கக்கூடியவை, டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களைத் தாக்கக்கூடியவை, கண்ணிவெடிகளைப் போன்று மண்ணிற்குள் புதைத்து வைத்து பின்னர் வெடிக்கும் தன்மை உடையவை என கொத்துக் குண்டுகளிலும் பலவகை உள்ளன.

இந்தக் கொத்துக் குண்டுகளை விமானங்களிலிருந்தும் வீச முடியும், தரையிலிருந்தும் இலக்கை நோக்கி ஏவவும் முடியும்.

அந்த சிறிய குண்டுகள் சிதறும் வேகத்தால், சிலவேளைகளில் தாக்குதல் இலக்கிற்கு  அருகில் இருக்கும் பகுதிகளையும் தாக்குகின்றன. இதன் போது பொதுமக்கள் உயிரிழக்கவும், காயப்படவும் நேரும்.

cluster bomb 1 கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?பெரிய குண்டு வெடித்து சிதறும் போது வெளியாகும் சிறிய குண்டுகள் மண்ணிற்குள் புதைந்து பிற்காலங்களில் வெடித்து சேதத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தக் குண்டுகளுக்குள் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த முடியும்.

இதனாலேயே கொத்துக் குண்டுகளை போரின்போதோ, தாக்குதலின் போதோ பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி “கன்வென்ஷன் ஒப் க்ளஸ்டர் ம்யுனிஷன்ஸ் (Convention on Cluster Munitions) எனப்படும் சர்வதேச உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, கொத்துக் குண்டுகளை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்லினில் நடந்த இந்தக் கொத்து எறிகுண்டுகள் தொடர்பான சர்வதேச ராஜீயப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும் இதுவரை 106 நாடுகள் இதை அமுலாக்கியுள்ளன.

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுத வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிறநாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில், தமிழீழப் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் போதும் இதே போன்ற கொத்துக் குண்டுகளே பாவிக்கப்பட்டன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தாங்கள் இந்தக் குண்டுகளைப் பாவிக்கவில்லை என கூறியிருந்தது. அப்போது உலக நாடுகள் இந்தக் குண்டுகள் பற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் பாவிக்கப்படும் போது மட்டும் இந்தக் குண்டுகள் பற்றி பெரியளவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவது இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.