கொடுமணல் அகழாய்வில் பெரிய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

கீழடியின் 6ஆம் கட்ட அகழாய்வின் போது சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குள் இருந்த எலும்புகள் ஆய்விற்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள்,  வாள், சிறிய கத்திகள், மண்குவளை, மண் சாடிகள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கல்லறைகள் இருந்த பகுதியை ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான மூன்று பானைகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில் ஒரு பானையை நேற்று(15) தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

மண் நிரம்பியிருந்த பானையில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றன காணப்பட்டன.  இதன் சில மாதிரிகைளை டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனை ஆய்வு செய்தால் அவர்களின் தொடர்பு மாதிரிகளை அறிய முடியும் என நம்பப்படுகின்றது.

தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.