கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் – பரணி கிருஸ்ணரஜனி

முஸ்லிம்கள் தம்மை ஒரு கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது.

இறை நம்பிக்கையையும் / மத அடையாளத்தையும் மட்டும் முன்னிறுத்தி தம்மை ஒரு தனித்துவ இனமாகக் கருதியே தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கு எதிராக நின்றார்கள் தீவின் முஸ்லிம்கள்.

ஆனால் அவர்கள் பெரிதும் நம்பும் ரமழான் நோன்பு நாட்களில் அதையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு சிங்கள பவுத்த கோட்பாட்டிற்குள் ஐக்கியமாக தயாராகிவிட்டார்கள்.

இது ஒரு வகையில் சுய இன அழிப்பும் கூட.

இத்துடன் இவர்களின் தனித்துவ அடையாளம் அரசியல்ரீதியாகப் பெறுமதி இழக்கிறது.

இன அழிப்பை நினைவு கூரும் இந்தப் பத்தாவது ஆண்டில் முஸ்லிம்கள் தாம் தமிழர் என்பதை மறந்து/ மறுத்து மத அடிப்படையிலான தனித்துவத்தை முன்னிறுத்தியதால் எழுந்த தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கான சிக்கல் – அந்த அடையாளத்தை துறப்பதற்கு அவர்கள் துணிந்திருக்கும் இந்த முடிவினூடாக – நீர்த்துப் போயிருப்பது மிக முக்கியமானதாகிறது.

ஆனால் மறு வளமாக இது ஒரு கவலை தரும் நிலையும் கூட.

ஒரு குழுமத்தின் அடையாளத்தைச் சிதைத்து விட்டு / அதன் வழி அதை அரசியல் நீக்கம் செய்து விட்டு ஒரு தாயகக் கோட்பாடு கட்டியெழுப்பப்படுவதை நந்திக்கடல் முற்றாக நிராகரிக்கிறது.

முஸ்லிம்களை அவர்களின் தனித்துவத்துடனேயே தமிழர் தாயகத்தில் வாழும் உரிமையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறது நந்திக்கடல் – இப்படி அடையாள அழிப்புச் செய்து அல்ல.

இன அழிப்பு அரசுடன் ஒத்தோடும் இந்த யுக்தி அடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தும் தூரநோக்கற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.

கால நீரோட்டத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தனித் தேசமாகும் போது சிங்களம் / தமிழ் என்று தேசங்கள் உடையும் போது முஸ்லிம்களின் இத்தகைய போக்கால் இரு தரப்பாலும் தனித் தீவாக அவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’.

முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை இது.

vesak 2019 கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் - பரணி கிருஸ்ணரஜனிஏனென்றால் ‘நந்திக்கடல்’ தமிழர்கள் விடுதலை குறித்து மட்டும் அக்கறை கொளள்வில்லை. அது உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இனக் குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கிறது.

கடந்த ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விவாதத்திற்கு அப்பால் தாக்குதல்தாரிகளின் இலக்கு தமிழர்கள்.

ஆனால் அது கிறிஸ்தவர்கள் என்ற புது வியாக்கியானம் வைக்கப்பட்டு அதுவும் சிங்கள ஆயரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம்கள்.

ஆனால் அதையே ஒரு சாக்காக வைத்து முஸ்லிம்களை கடந்த சில நாட்களாக அடித்துத் துவைத்துக் காயப்போட்டது இன அழிப்பு அரசு.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி கேட்பதென்றால் தமிழர்களிடம்தான் கேட்க வேண்டும். இதுதான் அடிப்படைச் சிக்கல்.

அடுத்து சக தமிழர்களாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளில் கலந்து கொள்ளாத முஸ்லிம்கள் தமிழர்கள் அழிக்கப்பட்டதை கொண்டாடும் வெற்றி நாளிலும் / சிங்களப் பண்டிகையிலும் கலந்து கொண்டு தமது அறத்தையும் , அடையாளத்தையும் இழந்தது மட்டுமல்ல தங்களுக்கான அரசியலையும் இழந்து நிற்கிறார்கள்.

இது ஒரு வகையில் துயரம்தான்..