கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மை; ஒப்புக்கொள்கிறார் சி.வீ.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் ஏமாற்றிவிட்டார் என்று எமக்குத் தெரியவந்துவிட்டது. அதுவரை நாம் ஐ.தே.கவைநம்பியது உண்மைதான்.

ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியமையும் உண்மைதான். அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒக்ரோபரில் அரசமைப்பு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, குழப்பம் வந்தபோது, இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு எனக் கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றிவிட்டார் என நாம் அறிந்து கொண்டோம்.

எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், மஹிந்த குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம். இனிவரும் காலங்களில் ஐ.தே.க.வுக்கு ஆதரவான நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எம் மத்தியில் இருக்கமாட்டார்கள். நாம்பட்டுத்தெளிந்து விடடோம்.

நாம் அனைவருடனும் பேசுவோம். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்குதான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை. இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம். ஏற்கனவே நாம் அனுபவப்பட்டு விட்டோம்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அண்மைக்காலமாக இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், அது பொருளாதார ரீதியான
பிரச்சினையே எனக் கூறி வருகின்றார். அவருடைய கருத்துத் தவறானது.

இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் அல்லது அதற்கு முன்னரும் கூட இங்கு வாழும் தமிழ் மக்களின் தனித்துவ தன்மை பேணப்பட வேண்டும். எமது இனம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.