கூட்டமைப்பினர் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தகுதியை இழந்து விட்டார்கள்

தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் தங்களை புனிதர்களாக காட்டிக்கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கான உத்திகளை தற்சமயம் அரங்கேற்றி வருகின்றனர்.

அரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்று எந்தவித நிபந்தனையும் இன்றி அரசை காப்பாற்றி வரும் கூட்டமைப்பு இன்று மக்களிடத்தில் புனிதர்களாக தங்களை காட்டிக்கொள்வதற்காக அரும்பாடுபட்டு வருகின்றது கையில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் கைநழுவ செய்தது மட்டுமன்றி உள்நாட்டில் ஆளும் அரசாங்கத்துடன் பேசி தீர்க்க வேண்டிய விடயங்களிலும் கோட்டை விட்டுவிட்டு இன்று மக்களிடம் அனுதாபத்தை தேடுவதற்காக கூட்டமைப்பினர் முன்னுக்குபின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காப்பாற்றி போர்குற்றவாளிகளை பாதுகாத்துவிட்டு இன்று அரசாங்கத்தை எதிர்பதுபோல் காட்டிக்கொண்டு அதே அரசாங்கத்தை நிபந்தனையின்றி ஆதரித்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக நான்கரைவருடகாலம் அரசுக்கு முண்டு கொடுத்துவிட்டு குறிப்பாக ஜநா மனித உரிமை பேரவையில் சவேந்திர சில்வா உட்பட இராணுவத் தளபதிகளைளுடைய பெயரை போர்குற்றவாளிகளின் பட்டியில் இருந்து நீக்கியதும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை மின்சார கதிரையில் இருந்து காப்பற்றியவன் நானே என்று மைத்திரிபால சிறிசேனா பகிரங்கமாக கூறும் அளவிற்கு கூட்டமைப்பின் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கால நீடிப்பு கையெழுத்து கடிதம் உதவி செய்துள்ளது.

இப்படி இருக்கையில்  சர்வதேச சமூகம் இன்னும் பார்வையாளராக இருக்கமுடியாது என்றும் நல்லாட்சி அரசு மக்களை ஏமாற்றி விட்டது சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்கள் இரத்தம் வழிகின்றது என்று புலம்புவது இவர்களின் வழமையான தேர்தல் கால பரப்புரைபோல் தெரிகின்றது.

தமிழ் மக்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி தங்களாகவே முன்வந்து
போராடிவருகின்ற போதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்கைளை தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு அல்லாமல் அரசாங்கத்தை பாதுகாக்கின்ற வகையிலே செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் ஆளும் அரசாங்கம் தங்களை
ஏமாற்றிவிட்டதாகவும் பொய்சொல்வதாகவும் இப்போது கூட்டமைப்பினர் கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது.

போராளிகளினதும் பொதுமக்களினதும் தியாகங்களால் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் கூட்டமைப்பினர் அன்றிலிருந்து இன்று வரை பல தொடர்ச்சியான வரலாற்றுதவறுகளை செய்துவருகின்றனர்இஆட்சி மாற்றத்திற்காக பல மில்லியனை பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளித்தது மட்டுமன்றி ஐநா மனித உரிமை பேரவையிலும் ஆறு வருடகாலம் தொடர்சியான காலநீடிப்பை பெற்றுக்கொடுத்தனர் சர்வதேச
இராஜதந்திரிகளுடன் தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேசவேண்டிய நேரத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இருந்து இலங்கையை காப்பற்றுவதற்கு இராஜதந்திரிகளுடன் இரவோடு இராவாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இறுதியில் அரசைக் காப்பாற்ற நீதி மன்றம் வரை சென்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி பல வருடகாலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஒரு நாள் கூட இவர்கள் நீதி மன்றம் செல்லவில்லை. தமிழர்களின் அன்றாட பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை கொள்கைரீதியாக செயற்படவேண்டியவர்கள் இன்று தங்களுடைய சுயநலங்களிற்காகவும் அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு  இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலை மையப்படுத்திய பரபரப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர் அதாவது தங்களது கருத்துகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்று மக்களை நம்பவைப்பதற்காக ஊடகங்களில் வீரஆவசே பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர் அத்துடன் தங்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல்
இருப்பதுபோல மக்களை நம்பவைப்பதற்காக தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை தாங்களே இராணுவ சோதனை நடவடிக்கைக்கு வழி ஏற்படுத்தி வெறும் பதவிக்காகவும் பணத்திற்கானதுமான அரைவேற்காட்டு அரசியலை செய்கின்றனர். மக்கள் இவர்களின் உன்மை முகத்தை நன்கு புரிந்துவைத்துள்ளதுடன் இவர்களுக்கு உரிய பதிலடியை வழங்குவதற்கான காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.