குற்றப் புலனாய்வு பிரிவு வாசலில் காத்துக் கிடக்கும் முஸ்லீம் உறவுகள் – அரைநூற்றாண்டுகளாக தமிழினம் அனுபவித்த துயரம் – சுரபி

சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழினம் அமைதிவழியில் போராடத் தொடங்கிய காலமுதல் சிறிலங்காவின் கொடிய சிறைவாசல்களில் தமிழ்மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த நாட்கள் இன்று கண்முன்னே விரிகின்றன.

ஒவ்வரு இராணுவமுகாம் வாசல்களிலும் பூசா,வெலிக்கடை ,மகசீன்,நாலாம் மாடி, அனுராதபுரம்,போன்ற கொடிய சித்திரவதைச் சிறைக்கூடங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் அடைக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்த நாட்கள் அவர்களைப்பார்க்க வடக்கு,கிழக்கு,மலையகம் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழைத்தாய்மார்கள்,மனைவியர்,குழந்தைகள் என தமிழினம் பரிதவித்து பயணித்த நாட்கள் இனக்கொலை வரலாற்றில் எழுதப்படவேண்டிய ஒரு அத்தியாயமே.

இன்று இந்த நிலையை முஸ்லீம் சமூகம் சில மாதங்களாக எதிர்நோக்கி நிற்கிறது. அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த வலிசுமந்த இனம் இன்ற வகையில் அவர்களின் வலியை எம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பதவிக்காக சிங்கள பேரினவாதத்திற்கு முண்டுகொடுக்க இனியும் முஸ்லீம் அரசியல்வாதிகளோ அல்லது தமிழ் அரசியல் வாதிகளோ முயல்வார்களானால் அது இரு இனங்களையும் அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே இருக்கும்.இதனைப்புரிந்துகொண்டு இரு இனங்களும் செயலாற்றவேண்டும்.