கீழடியை ஒத்த வடிகாலமைப்பு ஆதிச்ச நல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கீழடியில் கண்டு பிடிக்கப்பட்டது போல வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு ஆதிச்ச நல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்ச நல்லூரில் அகழாய்வுப் பணிகள் கடந்த மே 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தமிழக தொல்லியல்துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல்துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதிச்ச நல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வாழ்விடங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் வீடுகள்  அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.  கீழடியிலும் இதையொத்த வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதிலிருந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இங்கு தொல்லியல்துறையினர் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. எனவே கூடுதலான நிதியை ஒதுக்கி அகழாய்வை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் தாமிரபரணி கடற்கரையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த 37 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கும் அகழாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.