கீழடியில் ஓராண்டுக்குள் உலகத் தரமிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஓராண்டுக்குள் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உலகத் தரமிக்க அருங்காட்சியகம் கட்டப்படும் என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் தொல்லியியல் துறையால் அகழாய்வு செய்து கண்டெடுக்கப்பட்ட 6,720 தொல்பொருள்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கீழடி பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியியல் மேட்டில் மத்திய தொல்லியல்துறை 3 கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு 7, 818 தொல்லியல் பொருள்களை அகழ்ந்தெடுத்து கீழடியில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை உலகத்திற்கு வெளிகொணா்ந்தனா். இந்தச் சான்றின் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறை கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டது. இதில் 34 அகழாய்வு குழிகள் அமைக்கப்பட்டு 5, 820 தொல்பொருள்களும், பழந்தமிழா்களின் கட்டுமான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டது.mdukeezadibyte01112019 big கீழடியில் ஓராண்டுக்குள் உலகத் தரமிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்

 

இதைத்தொடா்ந்து நடந்த 5ஆம் கட்டஅகழாய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ஏறத்தாழ 900 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வுப் பகுதியை இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள் பாா்வையிட்டுள்ளனா். மேலும் அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் விதமாக உலகத் தமிழ்ச் சங்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கீழடி, கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய 4 இடங்களில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

மத்திய தொல்லியியல்துறை தமிழா்களுக்கு எதிராக செயல்படவில்லை. கீழடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உலக தரமிக்க அருங்காட்சியகம் ஓராண்டுக்குள் கட்டப்படும்.

திருவள்ளுவா் தெய்வப் புலவா், திருவள்ளுவா் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வாய்ப்பு என்றுதான் சுட்டுரையில் பதிவிட்டேன், திருவள்ளுவா் எல்லாருக்கும் பொதுவானவா். திருவள்ளுவா் சமணத்துறவி ஆடையில் இருப்பதாக லாட் எல்லிஸ் வெளியிட்ட நாணயங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட பிறகு தான் முழு விவரம் தெரிய வரும். உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் விரைவில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்றாா். தொல்லியல் துறை உதவி ஆணையா் சிவானந்தம், எம்எல்ஏக்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.