கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக தனஞ்ஜெயன் நியமனம்

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள நாகராஜா தனஞ்ஜெயன் இன்று (09.09.2019) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராகக் கடமையாற்றி வந்த இவர், கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநரினால் அனுப்பி வைக்கப்பட்ட பதவி உயர்வுடன் கூடிய நியமனக் கடிதத்தின் ஊடாக மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி இன்று திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தில் கடமையினை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 2012ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதோடு 2013ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராகவும் தொடர்ந்து மாநகர பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியைப் பயின்றுவரும் இவர் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன். இலங்கை நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை போன்ற பல போட்டிப் பரீட்சைகளில் தமிழ் பேசும் மாணவர்களை அதிகம் உள்ளீர்க்க வேண்டும் எனும் நோக்கில் கருத்தரங்குகளையும், பயிற்சி வகுப்புகளையும் நாடு பூராக மேற்கொண்டு வருவதுடன், பல சமுகத் தொண்டுகளையும் ஆற்றி வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கதாகும்.