கிழக்கில் ‘கண்’ வைக்கும் கோத்தாபுதிய திட்டம் ஒன்று தயாராகிறதா?-அகிலன்-

சிறிலங்காவின் ‘இரும்பு மனிதர்’ எனப் பெயரெடுத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பு ஒன்று முக்கியமானது. அதனை வழமையான ஒரு சந்திப்பு என நாம் அதனைக் கடந்து சென்றுவிட முடியாது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மகாசங்கத்தினருடன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அந்தச் சந்திப்பில் தமிழர் தாயகத்தைக் குறிவைத்த தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா, பொதுத் தேர்தல் என்ற ஆரவாரங்களுக்கு மத்தியில் அது கவனிக்கப்படாமல் போய்விடலாம் என்பது ஜனாதிபதி தரப்பினரின் கணிப்பாக இருக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் பௌத்த ஆலோசனைச் சபையை ஜனாதிபதி கூட்டுகின்றார். ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் பௌத்த மதத் தலைவர்ககளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது இதன் நோக்கம் எனக் கூறப்பட்டது. இலங்கைத் தீவை முற்றுமுழுதான ஒரு பௌத்த நாடாக மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு முக்கிய நகர்வே இந்த வெள்ளிக்கிழமைக் கூட்டம். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் இந்த வரிசையில் மூன்றாவது. கொரோனா அச்சம், கொழும்பில் ஊரடங்கு என்பவற்றுக்கு மத்தியில் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்ட மகாசங்கத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்தார்கள்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் மகாசங்கத்தினர் தெரிவித்த கருத்து முக்கியமானது. “படைவீரர்கள் நினைவு தினத்தில் (மே 19) ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்க அகராதியில் வார்த்தைகளே இல்லை” என மகாசங்கத்தினர் புகழாரம் சூட்டியபோது, கோத்தா குளிர்ந்துபோய்விட்டார்.

“நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்த படையினர் தேவையற்ற அழுத்தத்துக்கு உள்ளாக நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதேவேளை, எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதே னும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை” என்ற கோத்தாவின் உரைதான் மகாசங்கத்தினரை மெய்சிலிக்க வைத்திருந்தது.

இராணுவத்தைப் பாதுகாப்பதற்காக இந்த அறிவித்தலை வெளியிட்ட கோத்தா, “பௌத்த மயமாக்கலுக்காக” தன்னுடைய அடுத்த அறிவிப்பை மகாசங்கத்தினர் முன்பாக வெளியிட்டார். “கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்தவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்படும்” என்பதுதான் கோத்தாபயவின் செய்தி. இந்த செயலணி கூட, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் தலைமையிலேயே அமைக்கப்படுகின்றது. போர்க் குற்றங்கள் பலவற்றுடன் சம்பந்தப்பட்டவராக சர்வதேசத்தினால் அடையாளம் காணப்பட்ட கமால் குணரட்ணதான் தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். கோத்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரது வலது கை போன்றவர்.rr கிழக்கில் 'கண்' வைக்கும் கோத்தாபுதிய திட்டம் ஒன்று தயாராகிறதா?-அகிலன்-

“தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர். அவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி அவற்றைப் பாதுகாக்கும் பரந்த நிகழ்ச்சித் திட்டமொன்று தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்” என்ற அறிவித்தலையும் ஜனாதிபதி இங்கு வெளியிட்டார். இந்த அறிவிப்பு மகாசங்கத்தினரின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இலங்கையில் 1947 ஆம் ஆண்டிலிருந்தே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நீர்ப்பாசனத் திட்டங்களை அடிப்படையாகக்கொண்டுதான் இந்தக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. அல்லை – கல்லோயா முதல், மணலாறு வரையில் நீர்ப்பாசனத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் மீன்பிடிக் கிராமங்களை மையப்படுத்திய கடற்கரையோரக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. இப்போது தொல்பொருள் திணைக்கள் அந்தப் பொறுப்பை எடுத்திருக்கின்றது. ஒரு பகுதி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டால், அந்தப் பகுதி கொஞ்சநாட்களில் சிங்கள மயமாக்கப்படும் என்பது இலங்கையின் விதி.

வன்னியில் இதுதான் நடந்தது. அங்கு சுமார் 300 இடங்கள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக தொல்பொருள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்தப் பிரகடனத்தை அவர்கள் வெளியிடுகின்றார்கள் என்பதை யாருக்கும் அவர்கள் சொல்லத் தேவையில்லை. சுமார் 30 சிங்கப் பேராசிரியர்களே இந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர்களாக உள்ளனர். அதனால், நன்கு திட்டமிட்ட முறையில் சிங்கள மயமாக்கலை அவர்கள் மேற்கொள்கின்றார்கள். முல்லைத்தீவு செம்மலையிலும் இதேபோன்ற ஆக்கிமிப்புத் திட்டம் ஒன்று கடந்த வருடத்தில் இடம்பெற்றது. தமிழ் மரபுரிமை அமைப்பு மிகவும் உறுதியாக இருந்தமையால், அந்தத் திட்டம் தடுக்கப்பட்டது.

இப்போது கிழக்கில் கண்வைக்கின்றார்கள் என்பதை வெள்ளிக்கிழமை கூட்டம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் தொன்மைச்சான்றுகளை அழித்து பௌத்த மயமாக்கலை செய்து வருவது இரகசியமானதல்ல. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் . திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள் . மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள்.

இவற்றுக்கு சட்ட ரீதியானதும், வரலாற்று ரீதியானதுமன அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுதான் கமால் குணரட்ணவின் பணியாக இருக்கும். கோத்தபயா பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டலில், இராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி பௌத்த மதத்திற்கு சொந்தமான தொல்லியல் இடங்கள் என பூர்விக தமிழ் கிராமங்களில் இருந்து அப்பாவி தமிழ் குடும்பங்களை வெளியேற்றி கிழக்கு மாகாணத்தை பௌத்த மயமாக்கி , சிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் முன்னெடுப்பதை இலக்காகக்கொண்டதாகவே தமது வேலைத் திட்டத்தை வகுத்திருக்கின்றார்கள்.

இது குறித்து மேலும் வரிவாக அடுத்த வாரங்களில் பார்ப்போம்