கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறீதரனிடம் 4 மணி நேர விசாரணை

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முனைகிறார். ஏனைய இனங்களுக்கு எதிராகவும், ஏனைய மதங்களுக்கு எதிராகவும் தமிழ் இளைஞர் யுவதிகளை ஊக்குவித்து, வன்முறைக் கலாசாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முற்படுகிறார் என கொக்காவில் இராணுவ முகாம் அதிகாரியின் வழிநடத்தலில், சிவில் பாதுகாப்பு பிரிவில்(CSD) பணிபுரியும், இரத்தினபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்ட மாரிமுத்து ராஜா என்பவரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனும் இன்றைய தினம் (2020.05.15) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

கடந்த மார்ச்.8ம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகளின் முதற் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் கறுப்புநிற சீருடையுடன் கூடிய புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் ஆயுத வன்முறையை மீண்டும் உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் எனவும், யுத்த சூழ்நிலையில் எனது குடும்பத்தில் 9பேரை இழந்த என்னால் இனியும் இழப்புக்களை சந்திக்க முடியாதெனவும், தனது தேசிய அடையாள அட்டை இலக்கம் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தே இரத்தினபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து ராஜா என்பவரால் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இராணுவத்தின் கீழியங்கும் சிவில் பாதுகாப்பு பிரிவில் (CSD) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த மார்ச்.13ம் திகதி சிறீதரனும், வேழமாலிகிதனும் கிளிநொச்சி பொலிசாரால் அழைக்கப்பட்டு, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டாவது முறையாக இன்றையதினம் காலை 10 மணிக்கு அழைக்கப்பட்ட அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக நான்கு மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் மகளிர்தின நிகழ்வு குறித்து வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.