காஸாவில் இரு பாலஸ்தீனிய இளையோர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொலை

காஸா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்ரேலிய படையினர் இரு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

14 வயது அலிரபாயும் 17 வயது அலி அல் அஸ்கரும் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் 76 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயங்களை அவதானிக்கும்போது கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றமை புலனாகியுள்ளது என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 5000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர் என பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை காஸா எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது படையினர் 6000ற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது சிலர் வெடிபொருட்களையும் குண்டுகளையும் வீசினார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் எல்லையை கடந்து உள்ளே நுழைந்த பின்னர் திரும்பிச்சென்றனர் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தமது படையினர் கலகம் அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் தாங்கள் தப்பியோடிய பகுதிகளிற்கு மீண்டும் திரும்புவதற்கான உரிமையை கோரியும்  பொருளாதார தடைகளை விலக்குமாறு கோரியும் கடந்த 18 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் வாராந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2018 மார்ச்சில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.