காஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள் மக்களைவையில் நிறைவேற்றம் – அமித் ஷா பெருமிதம்

காஷ்மீரில் உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் மசோதா ஒன்று மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் 370 பிரிவு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அதிரடியாக இரத்துச் செய்யப்பட்டு,  அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.

தற்போது காஷ்மீரில் உருது, காஷ்மீரி ஆகிய மொழிகளே அலுவல் மொழியாக உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த வால்மீகி உள்ளிட்ட சமூகத்தினர் காஷ்மீரில் குடியேற ஒப்புதல் அளிக்கப்பட்டு அண்மையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது 5 மொழிகள் அலுவல் மொழிகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது குறித்து உள்துறை அமித் ஷா கருத்துத் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கும் ஒப்புதல் வழங்கும் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் ஆசையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று தெரிவித்தார்.