காணாமல் போன உறவுகளின் தலைவி பயங்கரவாத பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு. வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை ஒன்றை இன்றைய தினம் வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

இன்றுடன் 1055 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாம் மாடி விசாரணை பிரிவிற்கு வருமாறு கோரி புலானாய்வுத்துறையினரால் என்னையும் எனது கணவரையும் இம்மாதம் 13ஆம் திகதி 10 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மூன்றாவது தடவை என்னை விசாரணைக்காக அழைத்திருக்கின்றார்கள். முதல் இரு தடவையும் என்னை தனியாக கூப்பிட்டிருந்தார்கள். இப்போது கணவனையும் வருமாறு அழைத்திருக்கின்றார்கள். இதனை நான் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியே செல்ல விரும்புகின்றேன்.

சர்வதேசத்தின் கவனத்திற்கு இப்போராட்டம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். போன வருடமும் இவ்வாறே இடம் பெற்றிருந்தது.

புதிய ஜனாதிபதி வந்ததன் பின்னர் எங்களுடைய போராட்டங்களை பற்றி சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்திருக்கிறார்கள். அதனால் என்னை மீண்டும் இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள் என மேலும் தெரிவித்திருந்தார்.