‘கழுத்து அறுப்பேன்’ பிரிகேடியருக்கு பதவி உயர்வு!!

கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்ததற்காக குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஸ்ரீலங்கா இராணுவத்தின் முக்கிய பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா இராணுவத்தின் காணி, சொத்துக்கள் மற்றும் படையினருக்கான வீடுகள் ஆகியவற்றுக்கான பணிப்பாளர் சபையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியாக கடமையாற்றியிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்திருந்தார்.

ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரியின் இந்த செயல் தொடர்பான காணொளி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது செயலால் தமக்கு அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவர் உட்பட புலம்பெயர் தமிழர்கள் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் விடுத்த அழைப்பிற்கு அமைய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து அடுத்த தவணை விசாரணையின் போது அவர் மீதான பிடியாணை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர் சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி அவருக்கு இராஜதந்திரிகளுக்கான சிறப்பு தண்டனை முக்தி இருப்பதாக வாதிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்தவாரம் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றின் தலைமை நீதவான், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயல் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்திருப்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளதாகவும்அதனால் அவர் பிரித்தானியாவின் பொது ஒழுங்கு விதிகள் சட்டத்தை மீறியுள்ளதால் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

அதுமாத்திரமன்றி பிரிகேடியிர் பிரியங்கவிற்கு 2400 ஸ்ரேலிங் பவுண் அபராதத்தையும் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் விதித்தார்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு, இராஜதந்திர சேவையிலுள்ள ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தது.

எவ்வாறாயினும் சட்ட ரீதியாகவே இந்தப் பிரச்சனையை அணுக தீர்மானித்துள்ளதாகவும் அதற்கமைய வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இவ்வாறு பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடமையாற்றிய போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாடு தொடர்பிலான சர்ச்சை இன்னமும் முடிவுக்கு வராத நிலையில்இ அவருக்கு ஸ்ரீலங்கா இராணுவமும் முக்கிய பதவியொன்றை வழங்கியிருக்கின்றது.

இதற்கமையவே அவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் காணி, சொத்துக்கள் மற்றும் படையினரின் வீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் சபையின் புதிய பணிப்பாளராக நியமனம்பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவர் கொழும்புக்கு வெளியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.