கருணா ஈ பி டி பி இல் இணையலாம் டக்ளஸ் பகிரங்க அறிவிப்பு

கருணா விரும்பினால் எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணைச் சின்னத்தின் ஊடாக இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் யாரும் எமது கட்சியில் இணைய தடையில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் நீரியல்வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாக அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்த அமைச்சரிடம் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கில் வாக்குகளை சிதறடிக்காத வகையில் கருணாவுக்கு ஈ பி டி பி யில் இடம்கொடுக்குமாறு கருணாவின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பு தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று நான் எந்த கட்சியின் ஆட்சிக்கும் முட்டுக் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்த கட்சிகளுக்கு மேலதிக ஆதரவாகவே நான் இணைந்து செயற்பட்டு இருந்து வந்தேனே தவிர எந்த கட்சிக்கும் நான் இதுவரை முட்டுக் கொடுக்கவில்லை.

நான் மட்டும் தொடர்ந்து நாடாளுமன்றம் சென்று தமிழ் மக்களின் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது என்னுடன் பலர் நாடாளுமன்றம் வருகின்ற போது நிச்சயமாக மூன்று வருடங்களுக்குள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நிச்சயமாக என்னால் முடியும்.

நான் ஆயுதப் போராட்டம் மற்றும் ஜனநாயக நீரோட்டம் என பல வழிகளில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் ஊடாக நான் தொடர்ந்து கூறுவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மாகாணசபை முறையை முழுமையாக நடைமுறையில் ஆரம்பித்து தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் இது முடிவல்ல ஆரம்பமே.

இந்த நாட்டில் எனது அனுபவத்தின் படி சேர் பொன் ராமநாதன் தொடக்கம் பிரபாகரன் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாளாமையே இவ்வாறு பிரச்சினைகள் நீண்டு செல்வதற்கு காரணமாக இருந்தன என்பது தான் எனது கருத்தாக அமைகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.