கமால் குணரத்னவிற்கு எதிரான சாட்சியங்கள் உண்டு – ஜஸ்மின் சூக்கா

சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டு ஆதாரங்களைப் போன்று, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் சாட்சியங்கள், ஆதாரங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தொடர்பாக கருத்துரைக்கும் போதே, ஜஸ்மின் சூக்கா மேற்படி கருத்தைக் கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இவ்விடயம் குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் கமால் குணரட்ண, ஜோசெப் முகாமிற்குப் பொறுப்பாக காணப்பட்ட வேளை, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது. மேலும் குறித்த முகாமில் பாதிக்கப்பட்ட பத்துப் பேரின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் அழுத்ததிற்காக யுத்தத்தை நிறுத்த வேண்டிய நிலையைத் தவிர்ப்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு 14 மே 2019 அன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபயா ராஜபக்ஸ தனக்கும் சவேந்திர சில்வாவிற்கும் உத்தரவிட்டதாக கமால் குணரட்ண எழுதிய நூலில் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.

இலங்கையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளில் நியமிப்பதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதை ஊக்குவிக்கின்றது என்றும் யஸ்மின் சூக்கா மேலும் கூறினார்.