கன்னியா விவகாரம் அவசர கூட்டத்திற்கு மனோ அழைப்பு – பங்குபற்றுமா கூட்டமைப்பு

கன்னியாவில் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பெருமளவில் நேற்று (16) மேற்கொண்ட போராட்டத்தை தடுப்பதற்கு சிங்களக் காடையர்களும் சிங்கள பௌத்த துறவிகளும் வன்முறைகளைத் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ் மக்கள் மீது கொதி நீரையும் ஊற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறீலங்காவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறசேனவை அமைச்சர் மனோ கணேசன் தொடர்பு கொண்டபோது கன்னியாவில் விகாரை அமைக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்புச் செயலாளருக்கு தான் கூறவில்லை என மைத்திரி தெரிவித்துள்ளார்.

இந்த விவாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு மைத்திரிபால இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாளை (18) காலை அரச தலைவர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்றிற்கு வருமாறு மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனோவின் இந்த அழைப்பை ஏற்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒற்றுமையை காண்பிப்பார்களா? என்பது தான் தற்போது உள்ள முக்கிய கேள்வி?

ஏனெனில் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றிவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரட்டக்களத்தில் மக்களுடன் நின்று போராடுவது போன்று நாடகம் ஆடிவிட்டு பின்னர் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக சந்திப்புக்களை தவிர்ப்பது வழமையான செயற்பாடுகள் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதியான முடிவு எட்டப்படும்வரையில் விகாரை கட்டும் பணிகளுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என திருமலைமாவட்ட செயலாளர் புஸ்பாகுமாராவை பணித்துள்ளதாக மனோ மேலும் தெரிவித்துள்ளார்.