கண்டியில் உள்ள சிங்களவர்களையும் தமிழ் முஸ்லீம் மக்களையும் இணைக்க சம்பிக்க ரணவக்க முயற்சி

மலைநாடான கண்டியில் உள்ள சிங்களவர்களும் கரையோரத்தில் உள்ள தமிழ் -முஸ்லிம் மக்களும் ஒன்றிணைவதன் மூலமே சிறந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியும் என நகர திட்டமிடல் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் தேசிய வழி இயக்கத்தின் தலைவருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டை பாதுகாக்கும் நாட்டை உருவாக்கும் மக்கள் இயக்கத்தின் தேசிய வழி மாநாடு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மனிதாபிமானத்தை அறியாத பயங்கரவாதத்தின் இரத்தவெள்ள தாக்குதல்களுக்கு அஞ்சாமல் அம்மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு மத்தியில் எமது மனிதாபிமானத்தை உடைத்தெறிய இடமளிக்காமல் எமது தேசமாக எதிர்கால மனிதநேய இலக்குடன் தொடர்ந்து செயல்படும் வகையில் இந்த தேசிய வழி இயக்கம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளை தீர்த்து சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மக்களை அறிவுறுத்தும் வகையில் மாவட்டங்கள் தோறும் இந்த மாநாடு முன்னெடுக்கப்படுகின்றது.

sampika1 கண்டியில் உள்ள சிங்களவர்களையும் தமிழ் முஸ்லீம் மக்களையும் இணைக்க சம்பிக்க ரணவக்க முயற்சிஇதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாநாடு இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நகர திட்டமிடல் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் தேசிய வழி இயக்கத்தின் தலைவருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பரணவிதாரண,கண்டி மாவட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹிதாஸ் ஸத்தார்,அகில இலங்கை மக்கள் தேசிய கட்சி தலைவர் கே.விஸ்ணுகாந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் இனரீதியாகவும் மதரீதியாகவும் வன்முறைகள் வெடித்துவிடும் என்ற அச்சம் காரணமாக அதில் இருந்து இந்த நாட்டினை எவ்வாறு மீட்பது என்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பாகும்.

இதற்காக பாராளுமன்றத்தில் 11 சட்டங்களை கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதிலும் இனங்களுக்கிடையில் சந்தேகங்கள் நிலவிவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு பகுதியை பொறுத்தவரைக்கும் நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கு தெரியாது ஆனால் சிங்கள பகுதிகளை பொறுத்தவரையில் முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் பொருட்கள் வாங்க செல்வது குறைவான நிலையிலேயே உள்ளது.

முஸ்லிம்களை பொறுத்தவரையில் பொதுஇடங்களில் கூடுவதற்கும் தமது கடமைகளை செய்வதற்கும் அச்ச நிலையிலேயே இருந்துவருகின்றனர்.இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.எமக்குள் இருக்கும் அச்சநிலைமைகள் தூக்கியெறியப்படவேண்டும்.

இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. இந்தியா காஸ்மீருக்கு வழங்கிய விசேட அதிகாரத்தினை மீளப்பெற்றுள்ள
நிலையில் அது இந்தியாவின் வழமையான மாநிலங்கள் போன்று செயற்படும் நிலையுருவாகியுள்ளது. இதேபோன்று பங்களாதேசில் தீவிரவாத,அடிப்படைவாத கொள்கையுடையவர்களுக்கு அந்த நாடு தண்டனை வழங்கியுள்ளது.ஆகவே இவ்வாறான பிரச்சினைகள்
எங்களது நாட்டுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல,ஆசியாவில் உள்ள நாடுகளுக்கான பிரச்சினையாக காணப்படுகின்றது.

இந்த பிரச்சினையை நாங்கள் சரியான முறையில் தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சிபோன்றோ,விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்று இதுவும் பூதகரமான போராட்டங்களாக வெடிக்கும் நிலைமையேற்படும்.

ஆகவே இலங்கை அரசாங்கம்,அரசியல் கட்சிகள்,பொது அமைப்புகள்,முஸ்லிம் மதத்தலைவர்கள் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

இன்று படையினர்,பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மீதும் இந்த ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் பாதுகாப்பில் தவறுகள் நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளது.இந்த தாக்குதலை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என்று அன்று பாதுகாப்பு
தரப்பினர் இந்த சம்பவத்தினை திசைதிருப்பி விட்டனர். அதனைத் தொடர்ந்தே மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.

இந்த தாக்குதலை காத்தான்குடி மற்றும் கல்குடா பகுதிகளை சேர்ந்தவர்களே மேற்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பு மாவட்டம் மூன்று இனங்களையும் கொண்ட விசேட மாவட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் முன்னின்று உழைக்கவேண்டும்.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு
இந்தவேளையில் நான் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.மட்டக்களப்பில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் கிறிஸ்தவ மக்கள் கொல்லப்பட்டபோதிலும் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாமல் அமைதிகாத்தற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கின்றேன்.

மதத்தினால்,இனத்தினால் யாரையும் யாரும் தாக்குவதற்கோ, கொடுமைப்படுத்துவதற்கோ உரிமையில்லை.இலங்கைதான் எமது தாய்நாடு என்று கருதவேண்டும்.இலங்கையின் பொதுவான
சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பொதுவான திருமண சட்டம், தண்டைகளை ஏற்படுத்துதல்,உரிமைச்சட்டம் என்பனவற்றினை நிறைவேற்றுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.அதற்காக ஆதரவளித்தவர்களுக்கு நன்றி
தெரிவிக்கின்றேன்.

பாதுகாப்புதரப்பில் இருந்து பார்க்கும்போது ஜிகாத் என்னும் அமைப்பினை
விடுதலைப்புலிகளுடனோ ஜேவிபியுடனோ ஒப்பிடமுடியாது.பாதுகாப்பு தரப்பில் நவீன பொறிமுறையும் சிறந்த மூளைசாலிகளையும் கொண்டு புலனாய்வு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

விசேடமாக இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர் இலங்கையில் இருந்து தென்னிந்தியா உட்பட பல நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.இலங்கை புலனாய்வுக்கட்டமைப்பினை அரசியலுக்குள் ஈர்க்காமல் அவர்களை சுயாதீனமாக செயற்படும்
நிலையினை உருவாக்கவேண்டும்.

விடுதலைப்புலிகளுடனான யுத்ததின்போது இருந்த புலனாய்வாளர்களின் எண்ணிக்கையினை விட இரண்டு மடங்கு அதிகமான புலனாய்வாளர்கள் இன்று உள்ளனர்.2012,2013ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் புலனாய்வுகளுக்காக பல குழுக்களுக்கு பணமும் வசதிவாய்ப்புகளும்
சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

கத்தோலிக்க பேராயர் அவர்கள் இந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழுவினை நியமிக்குமாறு கோரியிருந்தார்.தற்போது ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற செயற்குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான விடயங்களை
பகிரங்கப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

2013,2014காலப்பகுதியில் ஷக்ரான் குழுவினருக்கு எந்தவகையில் நிதிகள் கிடைத்தன என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும்.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகள் சிலரும் செயற்படுவது வழமையாகவுள்ளது.

தேசிய தௌபீ ஜமாத் போன்ற அமைப்புகளுக்கு யார் நீதியுதவிகளை வழங்குகின்றார்கள் என்பதை அறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கையினை முன்வைக்கின்றோம். தேசிய தௌபீ ஜமாத் போன்ற அமைப்புகள் மீது வெளிவந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் விசாரணைகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்படவில்லையென்பதையும் நாங்கள் பார்க்கவேண்டும்.

அபிவிருத்தியின் பயன்கள் கட்சி பேதமின்றி,இனமத பேதமின்றி அனைத்துமக்களுக்கும் சென்றடையவேண்டும்.