கட்டாருக்கு எஃப்-22 தாக்குதல் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

முதல் முறையாக எஃப்-22 தாக்குதல் விமானங்களை கட்டாரில் உள்ள தனது தளத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது, இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உருமறைப்பு முறை மூலம் எதிரிகளின் ரடார்களில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட எஃப்-22 தாக்குதல் விமானங்கள் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாகும்.

இந்த விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா இதுவரை அனுப்பியதில்லை. தற்போது இந்த விமானங்கள் முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எத்தனை விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அமெரிக்க வான்படை வெளியிடவில்லை ஆனால் ஐந்து விமானங்கள் வானில் பறப்பதை கண்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொன்றும் 150 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை லொக்கீட் மாட்டின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்க வான்படையின் எஃப்-15 தாக்குதல் விமானத்திற்கு மாற்றீடாகத் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் வான் தாக்குதல், தரைத் தாக்குதல் மற்றும் வேவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியது.