கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலங்கையின் கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுடையவர்கள், நாட்டுக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல்டி சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வடமேல் கடற்பரப்பு எல்லைகளில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்து கரையோர பகுதிகளில் உள்ள மீன்பிடி சங்கங்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தி, பாதுகாப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் கப்பல்கள் அவதானிக்கப்படுமாயின், விரைவாக கடற்படையினருக்கு அறியப்படுத்துமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல்டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச எல்லைகள் ஊடாக ஏதிலிகள் பிரவேசிப்பதை தவிர்ப்பதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையில், இவ்வாறு ஏதிலிகள் அடங்கிய கப்பல் கடற்பரப்பில் அவதானிக்கப்படுமாயின், அந்த கப்பல், பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே அதனை பாதுகாப்பான முறையில் அனுப்பிவைப்பதற்கு கடற்படையினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.