கடந்த இரண்டு வருடங்களில் சீனா சந்தித்த முதலாவது விண்வெளித் தோல்வி

சீனாவின் விண்வெளித் திட்டம் இந்த வாரம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக றோய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (24) தெரிவித்ததுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செய்மதி ஒன்றைச் செலுத்தும் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை (23) சீனா தோல்வியைச் சந்தித்துள்ளது. விண்வெளித் திட்டத்தில் கடந்த சில வருடங்களாக சீனாவே முன்னிலை வகித்து வந்துள்ளது.

ஏனைய நாடுகளை விட அதிக செய்மதிகளை கடந்த வருடம் சீனா விண்ணுக்கு அனுப்பியிருந்தது. கடந்த வருடம் ஜனவரி மாதம் சந்திரனின் மறு பக்கத்தில் நிலைகொள்ளுமாறு செய்மதியை செலுத்தியதன் மூலம் சீனா வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.

ஆனால் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது செய்மதியை எடுத்துச் செல்லும் ஏவுகணை அதன் மூன்றாவது நிலையில் செயற்படவில்லை என சீனாவின் சிங்குவா ஊடகம் தெரிவித்துள்ளது.

150 அடி நீளமான ஏவுகணையானது செய்மதியை எடுத்துச் செல்ல முற்பட்டபோதே இந்த தோல்வி நிகழ்ந்துள்ளது.

சீனா அரசுக்கு தேவையான புலனாய்வுத் தகவல்களைத் சேகரிக்கும் நோக்கத்துடன் விண்ணில் செலுத்தப்படவிருந்த இந்த செய்மதியின் தோல்வி குறித்து பொறியியலாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.