கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் – யாழ். அரச அதிபர்

கச்சதீவுத திருவிழாவில் இம்முறை இலங்கை மற்றும் இந்தியர்கள் 9ஆயிரம் பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று(07) காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு கடற்படையினரின் உதவி மிக முக்கியமான ஒன்றாகும். ஆழ்கடல் போக்குவரத்திற்கு அவர்களின் உதவி இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக திருவிழாவிற்கு முதல் நாளான 6ஆம் திகதி அதிகாலை 5மணியில் இருந்து மதியம் 11மணிவரைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அன்று காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரைக்கும் குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவு நோக்கிய படகு சேவையும் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த முறை திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து மட்டும் 3ஆயிரம் பேரும் இலங்கையில் இருந்து 6ஆயிரம் பேரும் கலந்து கொண்டனர். இதேபோன்று இம்முறையும் 9ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.