ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமது உயர்ந்த எண்ணத்தை செயற்பாட்டில் காட்ட வேண்டுவது எமது கடமையாகும் என யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை  தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து இந் நாட்களில் அறிந்தவண்ணம் உள்ளோம்.பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ரோயாவா (நடைமுறை அரசு ) சிரிய குர்திஸ்தானை நோக்கி துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் இறுதி யுத்தத்தை அறிவித்துள்ளார்.பாரிய இனவழிப்பு நடைபெறும் ஆபத்தை பல சர்வதேச ஊடகங்கள் அறிவித்து வருகின்றது.எந்த நிலை ஏற்படின் தமது உரிமைக்காக இறுதிவரை போராடுவோம் என குர்திஸ் விடுதலைப் போராளிகள் அறிவித்துள்ளார்கள்.

தனி ஈழம் அமைக்கும் உரிமை போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் இரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆறென பெருகி ஓடிய இவர்களின் இரத்தத்திலேயே அவர்களின் சுதந்திர போராட்டத்தை முடக்கியது அங்குள்ள பெளத்த சிங்கள பேரினவாத அரசு.

ஈழத் தமிழர்கள் மீது பெளத்த சிங்கள அரசு நடத்திய கொலை வெறி தாக்குதலை ஐ.நா மன்றமும், சர்வதே மனித உரிமைகள் அமைப்புகளும் அனுமதி அளித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததைபோல் தற்போது குர்திஸ் இன மக்களுக்கு மீதான இனவெறி தாக்குதலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

kurdish65 ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை„2009 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை எப்படி அழித்ததோ, அதே மாதிரி (Sri Lankan Model ) குர்திஸ் போராட்டத்திலும் கையாளப்படவேண்டும் „ என துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் அன்று ஒருநாள் கூறியதை இத் தருணம் நினைவில் கொள்கின்றோம் .

ஐ.நா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து மெளனம் காத்து வருவதால், அவற்றின் மீது அப்பாவி மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது தொலைந்துவிட்டது.

கடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற தமிழர் போராட் டங்களிலும் குர்திஸ் இன மக்கள் எங்களுக்காக குரல் கொடுக்க என்றும் தயங்கியது இல்லை .

குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமது உயர்ந்த எண்ணத்தை செயற்பாட்டில் காட்ட வேண்டுவது எமது கடமையாகும்.இன்று நாள்தோறும் பலியாகி வருகின்ற குர்திஸ் இன மக்களின் வாழ்க்கையில் அமைதி நிலைத்து நிற்க ஈழத்தமிழர்கள் ஆகிய நாமும் என்றும் துணை நிற்போம்.