ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை

ஐ.நா மனித உரிமை பேரவையில் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னடைவுகள் குறித்த உயர்ஸ்தானிகர் முன்வைத்த எழுத்துமூலமான புதுப்பித்த தகவல்கள் தொடர்பில் இந்த சபை ஆழ்ந்து ஆராய்வதனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்டமைப்பிற்கு உட்பட்ட வகையில், நிலையான அபிவிருத்தி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்காக உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து ஈடுபடுவதற்கு இலங்கை உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நேற்று இடம்பெற்ற உயர் மட்ட அமர்வில், மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் குறித்த தனது நிலைப்பாட்டை, குறிப்பாக 2015 அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 30/1 மற்றும் 2017 மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 34/1 ஆகிய முந்தைய தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் 40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான தனது தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியது.

இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியிருந்தாலும், எமது அரசியலமைப்பின் கட்டமைப்பிற்கு உட்பட்ட வகையில், உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலமாகவும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேரூன்றிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும் மற்றும் ஐ.நா. மற்றும் அதன் முகவரமைப்புக்களின் உதவியுடன் தொடர்ந்தும் பணியாற்றுவதன் மூலமாகவும், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய, பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை அடைவதற்கான எமது உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்தினோம்.

தீர்மானம் 40/1 இன் இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான இலங்கையின் தீர்மானம் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியவர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான எமது உறுதிப்பாட்டினை இந்த சபைக்கு அரசாங்கம் மீண்டும் உறுதியளித்த போதிலும், நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி, மக்களின் ஆணையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்கத்தின் உண்மையான சாத்தியப்பாடுகளுக்குப் புறம்பாக, நான்கரை ஆண்டுகளாக வழங்கத் தவறிய ஒரு மேலோட்டமான போலியான தோற்றப்பாட்டில் அவர்கள் திளைத்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான எமது நிலையான கொள்கையின் பிரகாரம், எமது தீர்மானத்திற்கான காரணிகளை இந்தச் சபை அங்கீகரிக்கும் என்ற உண்மையான நம்பிக்கையுடன், உயர்ஸ்தானிகரின் தற்போதைய அறிக்கைக்கு பதிலளிக்கவும், இந்த சபையுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடவும் இலங்கை விரும்புகின்றது.

தீர்மானம் 40/1 ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து 1 ஆண்டு காலப்பகுதியிலும், ஆரம்பத் தீர்மானமான 30/1 ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து 4 ½ ஆண்டு காலப்பகுதியிலும், எமது அரசாங்கம் 100 நாட்கள் கொண்ட சிறிய காலப்பகுதியில் மாத்திரமே ஆட்சியில் இருந்தது என்பதனை நாங்கள் அறிகின்றோம்.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்த சபையின் 40 வது அமர்வின் போது, இலங்கை அரசாங்கம் எனது முன்னோடியான முன்னாள் வெளிவிவகார அமைச்சரினால் தலைமை தாங்கப்பட்ட தூதுக்குழுவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதுடன், இலங்கையின் அப்போதைய அறிக்கையில், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஐ ´முழுமையாக செயற்படுத்துவதில்´ உள்ள அரசியலமைப்பு, சட்ட மற்றும் சமூக – அரசியல் சவால்கள் குறித்து அவர் விரிவாக விளக்கியிருந்தார். இந்த சூழலில், தீர்மானம் 30/1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை ´முழுமையாக செயற்படுத்துதல்´ குறித்து உயர்ஸ்தானிகர் தனது தற்போதைய அறிக்கையில் வலியுறுத்துவதானது, நல்லெண்ணத்துடன், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசுகள் கொடுக்கும் குரல்களின் உண்மை மற்றும் சட்டபூர்வமான கருத்துக்களை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அங்கீகரிக்கத் தவறியமையை குறித்து நிற்கின்றது.

இந்த சபைக்கு முன் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதியும், பாதுகாப்புப் படையின் பதில் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்ட தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மையை இலங்கை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைகள் மற்றும் இந்த சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏனைய அறிக்கைகளில் லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மீது தொடர்ந்தும் கூறப்படும் தன்னிச்சையான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சில நாடுகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறுவதாகவும் இலங்கை கருதுகின்றது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையிலோ அல்லது அதனைத் தொடர்ந்த எந்தவொரு உத்தியோகபூர்வ ஆவணத்திலோ போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தனிநபர்கள் மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். தற்போது சேவையிலிருக்கும் அல்லது ஓய்வுபெற்ற இலங்கை பாதுகாப்புப் படையின் எந்தவொரு அதிகாரியினதும் அல்லது பொலிஸ் அதிகாரியினதும் உரிமைகளை பறிப்பது அநீதியானதாகும்.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ´அச்சுறுத்தும் விஜயங்கள்´, ´கண்காணிப்பு´, ´துன்புறுத்தல் முறைப்பாடுகள்´ மற்றும் ´பழிவாங்கல்கள்´ தொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூகத்தினரின் இடைவெளியை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளை பாதுகாப்பவர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து பெறப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்து வழக்குத் தொடர்வதனை உறுதிப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது.

மாகாண சபைகளை நிறுவிய அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கான அறிக்கையில் உள்ள குறிப்புகளைப் பொறுத்தவரை, மோதல் நிறைவடைந்தவுடன், வட மாகாணத்தில் உள்ள குடிமக்கள் மாகாண சபைத் தேர்தலில் தங்களது வாக்குரிமையை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பயன்படுத்த முடிந்தமையை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீவிரமான ஆதரவோடு முந்தைய அரசாங்கம் தீர்மானம் 30/1 க்கு இணை அனுசரணை வழங்கியமையினால், நாட்டின் எந்தப் பகுதியிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏறக்குறைய இரண்டு வருட காலதாமதம் ஏற்பட்டு, இலங்கையின் அரசியலமைப்பினால் கட்டளையிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வினை வழங்குவதற்கான செயற்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அவற்றை விரைவாக நடத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது.

சகலதையும் உள்ளடக்கியதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுமான இணக்கப்பாடு மற்றும் பொறுபுக்கூறல் செயன்முறைகள் மூலமாக நிலையான சமாதானம் அடையப்படுவதற்கான உயர்மட்ட அமர்வின் போது அறிவிக்கப்பட்ட இலங்கையின் அர்ப்பணிப்பினை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்ற பாராளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட தற்போதுள்ள இணக்கப்பாட்டுப் பொறிமுறைகள், அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்புக்குப் பொருத்தமாக பின்பற்றப்பட்டு தொடரப்படும். காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், தேவையான புலன்விசாரணைகளுக்குப் பின்னர், மரணச்சான்றிதழ்கள் அல்லது தொலைந்தோருக்கான சான்றிதழ்கள் வழங்குதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான பிற உதவிகளும் வழங்கப்படும்.

உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேய சட்ட மீறல்களை விசாரணை செய்த முந்தைய விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நிலைப்பாடு மதிப்பீடு செய்யப்படும். புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கிணங்க செயன்முறைப்படுத்துவதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

தற்போது நியாயாதிக்கச் செயன்முறையிலிருக்கும் துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தேசியச் சட்ட அமுலாக்கல் முறைமைகளினால் புலன்விசாரணை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

ஒருபோதும் நடைமுறைப்படுத்தமுடியாத நோக்கத்தில், வழங்கமுடியாத கடப்பாடுகளை ஏற்றுக்கொள்வதை விட, இலங்கையினதும் அதன் மக்களினதும் நன்மைக்காக, வழங்கப்படக்கூடிய இணக்கப்பாட்டு நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்தும் இந்த அணுகுமுறையை இச் சபை பாராட்டும் என நாம் நம்புகின்றோம்.

மேற்குறிப்பிட்ட அளவீடுகளுக்குட்பட்டு, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் நடைமுறைகளுடனான எமது ஈடுபாட்டை நாம் தொடரவும், உள்நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கிணங்க, பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட துறைகளில் திறன்களை கட்டியெழுப்புதல் மற்றும் தொழில்நுட்ப உதவி மூலமாக சர்வதேச சமூகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் பணிபுரிவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி