ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

‘இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் – ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு, ஊழல்களை மறைக்கும் செயற்பாடுகள், அதன் பாதுகாப்புச் சபையின் சனநாயகமற்ற செயற்பாடுகள் யாவும் பலரையும் ஆத்திரமடையச் செய்கின்றன. சமாதானம் என்ற பெயரில் அது போருக்கு போகிறது. அதே நேரத்தில் கொடூரமான இனவழிப்பை கைகட்டி நின்று பார்க்கிறது. இக்காலத்தில் ஐநா ஒரு ரிலியன்கள் (மில்லியன் மில்லியன்) டொலர்களை செலவு செய்திருக்கிறது….. பலரும் சொல்வது போல ஐநா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் அதை நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்கும். அதில் பல குறைபாடுகள் உண்டு அதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே’

இவ்வாறு சொன்னது வேறு யாரும் இல்லை – பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாள்.

இந்த ஐநாவின் வேறு ஒரு பிரபலமான அமைப்புத்தான் யூனிசெப். இதன் தலைவரின் சம்பளம் என்ன தெரியுமா? மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா. ‘அரசசார்பற்ற’ தொண்டு அமைப்புக்களின் தலைவர்களின் சம்பளத்தில் மிகவும் அதிகம் சம்பளம் பெறுபவராக இதன் தலைவர் இருக்கிறார். அதுமட்டுமல்ல யூனிசெப் அமைப்பு ஐ-அமெரிக்காவினது என்பதற்கும் எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. அதன் தலைவர்கள் எப்போதும் – அன்றிலிருந்து இன்றுவரை – ஐ-அமெரிக்கர்களாகவே இருப்பார்கள். யுனிசெப்பின் மூலம் ஐ-அமெரிக்கா தனது பூகோள ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இதுவும் ஒரு வழி.

இந்த யூனிசெப் சிறுவர் நலனுக்காக என்று பிரபலப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு நெருக்கமான கார்பரேட் எது தெரியுமா? குழந்தைகளுக்கு நப்கின் உற்பத்தி செய்யும் ‘பம்பேர்ஸ்’ நிறுவனம் தான். ‘பம்பேர்ஸ்’ போன்ற நப்பின்கள் சூழலை எந்த அளவுக்கு மாசு படுத்துகிறது என்பது சூழலில் கரிசனை உள்ளவர்களுக்கு தெரியும். ‘பம்பேர்ஸ்’ நிறுவனம் ‘பம்பேர்ஸ்’ விற்பனையில் ஒரு சிறு பகுதியை யூனிசெப்புக்கு கொடுக்கிறது. இது ‘பம்பேர்ஸ்’க்கான விளம்பரம். அதற்கு விளம்பரத்தை யார் செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

இதே யூனிசெப் நிறுவனம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எத்துணை தீமை செய்தது என்று பார்ப்போம்.UNICEF0618 01 ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

பொது மக்களிடையே விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிய எண்ணத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1980களில் விடுதலைப்புகளின் சீருடை அணிந்த ஏழு வயதுச் சிறுவர்களின் படங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். கவனிக்கப்படாது விடுபட்ட சிறுவர்களை எடுத்து அவர்களுக்குக் கல்வி கொடுத்து அவர்களைச் சமூகம் மதிக்கும் ஒரு போராளி ஆக்குவதை ஒரு நல்ல காரியமாகவே விடுதலைப்புலிகள் அக்காலத்தில் நோக்கினர்.

விடுதலைப்புலிகளின் இச்சிறுவர் இணையும் கலாசாரம் கலாச்சாரம் 1980களில் உருவாகி வளர்ந்தது. இக்காலத்தில் சிறுவர் போராளிகள் பற்றிய சர்வதேச சாசனமாக ஜெனீவா சாசனம் மட்டுமே இருந்தது. இதில் படையில் இணைக்கப்படுவோரின் வயது 15க்கு மேலிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சிறுவர் போராளிகள் பற்றிய ஐநா சாசனங்களோ ஐநா திட்டங்களோ ஐநா நடவடிக்கைகளோ எதுவும் 1980களில் இருக்கவில்லை. ஐநாவின் சிறுவர் உரிமை பற்றிய சாசனம் 1987ம் ஆண்டிலேயே பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தச் சாசனத்தில் கூட படையில் இணைக்கப் படுவோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியோடிணைந்த அதன் சிறுவர் போராளிகள் என்னும் விடயம் அதுபற்றிய சர்வதேச சாசனங்களோ அக்கறைகளோ இல்லாத ஒரு காலத்தைச் சேர்ந்தது என்பதே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.

2001ம் ஆண்டிலேயே ஐநாவின் சிறுவர் உரிமைகளுக்கான சாசனத்திற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட இணைப்பில் அரசசார்பற்ற ஆயதக்குழுக்கள் மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே தமது அமைப்பில் சேர்க்கலாம் என்ற உறுப்புரை முதன்முதலில் சேர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் என்னும் அத்தியாயத்தில் உள்ள இப்பாரிய கால முரண்பாட்டை மறைத்து யூனிசெப்பின் தலைமையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் முடக்கிவிடப்பட்டது.

அதே நேரத்தில் அரசுகள் 18 வயதுக்கு குறைந்தோரை இணைப்பதை இந்த ஐநா சாசனம் அனுமதித்தது. இன்றும் உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் 18 வயதுக்கு குறைந்தோரை பாடசாலைகளுக்கு சென்று இராணுவத்தில் இணைக்கிறார்கள். இச்சாசனத்தின் நோக்கமே ஆயுத விடுதலைப் போராட்டங்களை நலிவடையச் செய்வது என்ற கருத்தை இது வலுவாக்குகிறது.UNICEF0618 05 ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் இருந்த பல முதுநிலை உறுப்பினர்களும், தமிழ்செல்வன் உட்பட, சிறுவர் போராளிகளாகவே இணைந்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பல முதுநிலைத் தளபதிகள் சிறுவர் போராளிகளைப் பற்றிய சர்வதேச பிரச்சாரம் தமக்கெதிராகப் பழிவாங்கும் நோக்குடன் செய்யப்படுகிறது என்றே சரியாகவே கணிப்பிட்டார்கள். இதில் உண்மை இருப்தை இச்சர்வதேச அமைப்புக்களின் பிற்கால நடத்தைகள் உறுதிப்படுதின. 2008இல் சிறிலங்கா அரசு சர்வதேச அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேற சொன்னது. அப்போதே அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்ற சந்தேகம் இருந்தது. அப்படியிருக்க மறு பேச்சில்லாமல் அத்தனை அமைப்புக்களும் வெளியேறின.

விடுதலைப்புலிகள் பற்றிய யூனிசெப்பின் மேலும் சில நடவடிக்கைகளை இப்போது பார்ப்போம்.

யூனிசெப்பின் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருக்கும் சிறுவர் போராளிகள் பட்டியலில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் வயது குறைந்த பல சிறுவர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களை செஞ்சோலை, அறிவுச்சோலை என்ற இரண்டு சிறுவர் இல்லங்களில் இருந்தார்கள். 2004ம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து மட்டக்களப்பில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் ஒரு கிளை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு மாவட்டங்களிலும் பராமரிப்புக் கிடைக்காத சிறுவர்களை விடுதலைப்புலிகள் இச் செஞ்சோலைக் கிளையில் இணைத்தார்கள்.

பின்னர் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பைக் கைவிட்டபோது இச்சிறுவர்கள் வன்னிச் செஞ்சோலைக்கு மாற்றப்பட்டார்கள். இச்சிறுவர்களை இவர்களின் பெற்றோரிடம் இணைக்கும்வரை சிறுவர் போராளிகள் பட்டியலிலிருந்து இவர்களை நீக்குவதற்கு யூனிசெப் அமைப்பு மறுத்தது.

ஆனால் யூனிசெப் அமைப்பாலோ அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தாலோ இச்சிறுவர்களை அவர்களின் பெற்றோருடன் இணைக்க முடியவில்லை. சில சிறுவர்களின் குடும்பங்களையே இவ்வமைப்புக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுனாமி அழிவின் பின் சில குடும்பங்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. குடும்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களைக்கூட கிழக்கிற்கு அழைத்துச்செல்ல சிறிலங்கா அரசு அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் விடுதலைப்புலிகளின் கடும் முயற்சியின் பின்னரும் யூனிசெப்பின் பட்டியலின்படி ‘விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மிகவும் வயது குறைந்த சிறுமிக்கு 7 வயது’. இவர் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்தார். 2007ம் ஆண்டில் கூடச் சர்வதேச ஊடகங்கள் யூனிசெப்பின் கூற்றாக ‘இவ்வுண்மையை’ வெளியிட்டன.

மூளை வளர்ச்சி சிறிது குன்றிய 9 வயதுச் சிறுமி ஒருத்தி தன் வீட்டில் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவள் சென்ற பாடசாலையின் ஆசிரியர்கள் இச்சிறுமியின் குழப்பதை அவதானித்தனர். ஒரு நாள் இரவு இச்சிறுமி வீடு திரும்பாமல் தனது வகுப்பறையிலேயே தங்கிவிட்டாள். அப்பிரதேசத்தின் விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் சிறுமியை ஒரு சிறுவர் இல்லத்தில் தங்க வைத்தார். சிறுமியின் குடும்பத்தினர் எவரோ இதுபற்றி யூனிசெப்பிடம் முறையிட்டனர்.2458201858327722646 ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

சிறுமியின் பின்னணி எதையும் விசாரிக்காமல் அவளும் யூனிசெப்பின் சிறுவர் போராளி பட்டியலில் இணைக்கப்பட்டாள். இச்சிறுமிக்குப் பாதுகாப்பான குடும்பச் சூழல் இல்லாததால் இறுதி வரையும் இச்சிறுவர் இல்லத்திலேயே அவள் பராமரிக்கப்பட்டாள். கடும் முயற்சியின் பின்னரே இச்சிறுமியை யூனிசெப்பினர் தமது பட்டியலில் இருந்து எடுத்தனர்.

விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பிரிவில் ஒரு 17 வயது வாகன ஓட்டுனர் பணியாற்றினார். இவர் 2007 ஆண்டில் சிறிலங்கா ராணுவத்தின் ஒரு கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தில் இவரே மூத்த பிள்ளை. தாயுடன் பல தம்பி தங்கைகளையும் கொண்ட அக்குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் ஒரே நபர். அவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளிடமிருந்து கொடுப்பனவு செல்வதற்காக என்றே விடுதலைப்புலிகள் அவரைப் பணியிலிருக்கும் போது கொல்லப்பட்ட ஒரு துணைப்படை வீரர் என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பை மட்டும் வைத்துக் கொண்டு, இதன் பின்னணியை அறியாமல் – அறிய விரும்பாமல் – யூனிசெப் அவரை கொல்லப்பட்ட ஒரு சிறுவர் போராளி என்றே அறிக்கை விட்டனர்.

சிறுவர் போராளிகள் அமைப்பிலிருப்பதை நிறுத்துவதற்கு விடுதலைப்புலிகள் தீவிரமாக வேலைசெய்து முழு வெற்றியும் கண்ட காலமான 2007 ஆண்டுப் பிற்பகுதியில் நியூசிலாந்து ஹேஇரால்ட் என்ற பத்திரிகையில் யதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு மோசமான கட்டுரை வெளிவந்தது.

இக்கட்டுரையை நியூசிலாந்து யூனிசெப் அமைப்பு வெளியிட்டது. ஐநாவின் யூனிசெப் அமைப்போ தமக்கும் நியுசிலாந்து-யூனிசெப் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்றார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள யூனிசெப் அமைப்புக்கள் நிதி திரட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டன என்றும் அவர்கள் சுதந்திரமாச் செயற்படுபவர்கள் என்றும் சொன்னது ஐநா-யூனிசெப். சிறுவர் போராளிகள் என்னும் கவர்ச்சியான விடயம் நிதி திரட்டலுக்கு எவ்வளவு உதவுகிறது என்பதையும் இதனூடாக புரிந்ததுகொள்ளலாம்.

இவ்வாறு மறைமுகமாக எம்மை அழித்த ஐநாவை நோக்கி நாம் எவ்வளவு வளங்களை விரயமாக்குகிறோம். உண்மையில் யஸ்மின் சுலூகா, ஃபிரான்சிஸ் ஹரிசன் போன்றவர்களும் சுதந்திரமாக இயங்குபவர்களாக ஒரு தோற்றத்தை காட்டிக்கொண்டு ஐநாவின் அதாவது ஐ-அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவாகவே நடப்பார்கள். உலகில் இனவழிப்பு பற்றி ஆய்வு செய்பவர்களில் பலர் ஈழத்தமிழர் இனவழிப்பை ஏற்று அது பற்றி எழுதியும் வரும் போது யஸ்மின் சுலூகா போன்றவர்கள் மட்டும் எதற்காக ஈழத்தமிழர் இனவழிப்பை பகிரங்கமாக ஏற்றவில்லை என்று நாம் சிந்தித்தோமா? இவர்கள் அவ்வாறு ஏற்றால் இவர்களுக்கு நிதி கிடைப்பது உடனே நின்றுவிடும் என்பதால் தான். சிந்திப்போம். போராடுவோம்.

<ஐ. நா பற்றி அன்றே சொன்னாள்>

“..கோழிச் செட்டைக்குள்
குஞ்சுகள்தான் பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன…
……..
உலக சமாதானம் – இந்த
உன்னத கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ
முகம் தெரியாவிட்டாலும் – சீ…
முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது…”

-மேஜர் பாரதி-17203190 1530519200305752 4681341544902654294 n ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி