ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தான் செய்யப் போகும் வேலைகளை விபரிக்கின்றார்

காலிமுகத்திடலில் ஒரு பேரணியை நடத்தி தமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசாவை வரவேற்கும் மக்கள் பேரணி, 12.08 பிற்பகல் பதுளையில் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரவீந்திர சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாகக் கொண்டு வருவதேயாகும் என்று கூறினார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸவை கண்டு தான் அனுதாபப்படுவதாகவும் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய சஜித் பிரேமதாசா தெரிவிக்கையில், இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக் கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு நாங்கள் நம்மை அர்ப்பணிப்போம் என்றும் பாதுகாப்பான முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்குவேன் என்றும், அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,

பொருளாதார மூலதனத்தை வலுப்படுத்தி முன்னேறி செல்ல வேண்டும். இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக் கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக்குவோம்.

அதேவேளை நாம் நாட்டைப் பலப்படுத்த வேண்டுமெனில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். சிங்கள – பௌத்த தலைவர்கள் என்ற ரீதியில் புத்த பகவானின் போதனைகளுக்கு மதிப்பளித்து இன, மொழி, மத பேதங்களை பாராது நாட்டு மக்களை சமனான விதத்தில் நடத்த வேண்டும்.

30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம். மலையக மக்களை பாதுகாப்போம்.

நாட்டிற்கு பயனுள்ள எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால், நாட்டின் சுயாதீனத்தை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாம் எமது காலத்தில் செய்து கொள்ளப் போவதில்லை.

அத்துடன் நாட்டை நாம் பலப்படுத்துவதற்கு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தல் வேண்டும். எமது நாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு என்றும் இடமிருக்காது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு மாறாக அதனை முற்றாக அழிப்பதே எமது இலக்காகும். இதற்கான அனைத்து செயற்பாடுகளையும் நாம் எடுப்போம்.

நான் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமாக மதித்துக் காப்பாற்றுவேன். நான் எவருக்கும் அச்சப்படுபவன் அல்ல.

எனக்கு 52 வயதாகி விட்டது. நான் மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல. எனது தந்தையைப் போல நடுவீதியில் மக்களுக்காக உயிரை விடவும் தயாராக உள்ளேன் என்று கூறினார்.