ஏவுகணைத் தாக்குதல்: 100 ஏமன் ராணுவ வீரர்கள் பலி

ஏமன் நாட்டில் ராணுவ முகாம் ஒன்றில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத் தாக்குதலுக்கு 100 பேர் பலியானதாக மருத்துவ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டில் சனாவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மத்திய மாகாணமான மரிப். இங்குள்ள ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் மசூதி ஒன்றில் நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வான்வழிமூலம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 70 ஏமன் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக ராணுவ வட்டாரம் கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஏமன் அதிபர் அபேத்ராபோ மன்சூர் ஹாடி கண்டனம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ சபா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏமன் அதிபர் கூறுகையில், “இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது மற்றும் பயங்கரவாதம் மிக்கது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த இழிவான நடவடிக்கைகள் அவர்கள் சமாதானத்தை அடைய விரும்பவில்லை என்பதை சந்தேகமின்றி உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு மரணத்தையும் அழிவையும் தவிர வேறு எதுவும் தெரியாது. மேலும் இப்பகுதியில் மலிவான ஈரானிய கருவியாகவும் அவர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு உடனடி பொறுப்பையும் ஏற்கவில்லை.

ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் நடந்து வருகிறது. ஆயினும் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வடக்கு தலைநகரான சனாவைக் கைப்பற்றியதில் இருந்து 2014 முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை எதிர்கொள்ளும் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி தலைமையிலான ராணுவமும் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தை ஆதரிக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் மோதலில் தலையிட்டதனால், 2015 முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள், கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்,

இந்த மோதல் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, நாட்டை பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.