எழுவர் விடுதலை தொடர்பாக 57பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால், ராஜீவ் கொலைத் தண்டனைக் கைதிகளை பரோலில் அல்லது பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று 57பேர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கி. வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருஸ்ணன், வேல்முருகன் உட்பட 57பேர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசே கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார, சுகாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி நபரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாக தொற்றி உயிரிழப்பில் கொண்டு போய் விடும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது இடநெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக் கடுமையான நெருக்கடிக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றது. சில நாடுகளில் சிறையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் கூட்டமாக இருப்பதால், அங்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை பரோலிலோ அல்லது பிணையிலோ விடுவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கின்றது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு நீண்ட நாள் பரோல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் வாடும் கைதிகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான தொற்று நோய் இருப்பதால் அவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. இது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தமிழக சிறைகளில் கைதிகள் மிகவும் இடநெருக்கடியில் தான் இருந்து வருகின்றனர். சுகாதாரம் இல்லாமலும் மருத்துவமனை வசதிகளும் இல்லாமல் தான் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் 7தமிழர் உள்ளிட்ட அரசியல் கைதிகளையும் இஸ்லாமிய சிறைக் கைதிகள் மற்றும் அரசியல் சிறைக் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படிக்கு

கி.வீரமணி, பழ.நெடுமாறன் உட்பட 57 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.