எல்லைப் பிரச்சினைகளை நாங்கள் ஆரம்பிப்பது இல்லை – சீன வெளியுறவு அமைச்சர்

இந்திய – சீன எல்லையில், சீனா எப்போதும் பிரச்சினைகளை ஆரம்பிக்காது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ பிரான்ஸில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வாங் யீ, கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை இன்னமும் பிரிக்கப்படவில்லை என்பதால், இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இந்திய – சீன எல்லையில் சீனா எப்போதும் ஸ்திரத்தன்மையையே பேண விரும்புகின்றது. நாங்கள் எப்போதும் பிரச்சினைகளை ஆரம்பிப்பதில்லை. ஆனாலும் எங்கள் பகுதியின் இறையாண்மையையும், பிராந்திய ஓர்மையையும் உறுதியாகப் பாதுகாப்போம்.

பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இருதரப்பு விவகாரங்களையும் முறையாகப் பேசித் தீர்ப்போம். எப்போதும் மோதலுக்கு வழிவகுக்கக் கூடாது. பிரதமர் மோடியும், அதிபர் ஜின்பிங்கும் பல சந்திப்புக்களை நடத்தியுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று(01) இந்தியாவில் உள்ள சீன தூதரக அதிகாரி ஜி ரோங் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், “ஆகஸ்ட் 31ஆம் திகதி இந்தியப் படைகள் இந்தியா– சீனாஇடையே நடைபெற்ற பலமட்டப் பேச்சுவார்த்தைகளின் உடன்படிக்கையை மீறியது. எல்லைப் பகுதிகளில் இந்தியப் படைகள்  அத்துமீறி நுழைந்தன. இதனாலேயே எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவின் இறையாண்மையை மீறியுள்ளது. இது உடன்படிக்கைகளை மீறிய செயலாகும். எல்லைப்பகுதியில் சிக்கல்களை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.