எரிவாயு குழாய் எதிர்ப்பு;பூர்வகுடிகளை கைது செய்தது கனடா

வடக்கு பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள தமது பூர்வீக நிலங்களில் இயற்கை வாயு குழாய்கள் அமைப்பதற்கு எதிராக ஜனநாயக வழிகளில் போராட்டம் மேற்கொண்டு வந்த மக்களை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை நாய்கள் சகிதம் கடந்த வியாழக்கிழமை (06) சென்ற கனேடிய காவல்துறையினர் 6 போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.

வெற்சுவேறன் பகுதி மக்களே 670 கி.மீ தூரத்திற்கு விளை நிலங்களின் ஊடாக 4.5 பில்லியன்  அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்படும் எரிவாயுக் குழாய்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் துப்பாக்கி வைத்துள்ளார்கள், அவர்களிடம் பொறிமுறை உள்ளது, அவர்கள் ஒரு போருக்கு தயாராகவே உள்ளனர் என இந்த கைது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெற்சுவேறன் பூர்வீகத் தலைவர்  கூறியுள்ளார்.

மாகாண அரசுக்கும் அந்த பிரதேச பூர்வீக மக்களுக்கும் இடையில் இந்த விவகாரம் தொடர்பில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்தே கனேடிய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை தொடர்பில் தகவல்களை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டதுடன், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதமும் கனேடிய காவல்துறை 12 செயற்பாட்டாளர்களை கைது செய்திருந்தது.