எமக்கு வாக்களிக்காமல், தமிழ் மக்கள் எம்மிடம் எந்தத் தீர்வையும் எதிர்பார்க்க முடியாது ; ராஜபக்ச செவ்வி

தமக்கு வாக்களிக்காமல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும் என முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மிரருக்கு  வழங்கிய ​விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வியின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு,

கே: சர்வதேச ரீதியில், மனித உரிமை மீறல் பிரச்சினைகளையும், உங்களுடைய ஆட்சி எதிர்நோக்கியிருந்தது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதேபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வலுக்கும் வாய்ப்புள்ளதல்லவா?

இலங்கையின் முடிவுகளை, வேறு நாடுகளுக்குத் தேவையான வகையில் எடுக்க முடியாது. உதாரணத்துக்கு, இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, ஜனாதிபதியின் தீர்மானமாகும். அதை எம்மால் எதிர்க்க முடியாது.

தற்போது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றியவராவார். ஆனால், அப்போது இருக்காத பிரச்சினை, தற்போது அவர் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெறும்போது வருவது வேடிக்கையானது. அப்படிப் பார்த்தால், இந்நாட்டில் எவருக்கும் பதவி உயர்வு வழங்க முடியாது போகும்.

ஜனாதிபதிதான் இந்த நாட்டின் தலைவர். அதனால், அவருடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத்தான் இந்த நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும். தவிர, வேறு நாடொன்றுக்குத் தேவையான ஒருவரை நியமித்து, அந்த நாட்டுக்குத் தேவையான விதத்தில் பணியாற்ற முடியாது. அதனால், ஜனாதிபதியின் முடிவு சரியானதே. இருப்பினும், அதை எதிர்ப்பதை, பொதுவான விடயமாகவே பார்க்க முடியும்.

கே: தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் குவிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளதா?

உண்மையில், அவர்களுடைய வாக்குகளை எதிர்பார்த்து, அவர்களுக்காகப் பணியாற்ற நாம் நினைக்கவில்லை. அவர்களுடைய வாக்குகள் எங்களுக்கு முக்கியம்தான். ஆனால், அதுவொன்றையே எதிர்பார்த்துக்கொண்டு, அவர்களுக்கான நாம் பேசவில்லை. அவர்களுடைய நலனுக்காகத்தான், அவர்கள் பற்றி நாம் பேசுகி​ன்றோம்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், நான் என்னுடைய ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து, வேறெந்த அபிவிருத்தியும் அங்கு இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

ஒருவர் கூறியிருந்தால், வடக்குக்கான ஆறு பிரதான வீதிகள் இருந்தன, அவற்றில் ஐந்து, மஹிந்த காலத்தில் புனரமைக்கப்பட்டதோடு சரி, மற்றொன்று இதுவரையில் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் பற்றி, இந்த அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை.

விவசாயிகள் பற்றிக் கவனிப்பார் யாருமில்லை இப்போது. அதனால், தனியார் நெல் கொள்வனவாளர்கள் வந்து, 26, 28 ரூபாய்க்கென, நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு செல்கிறார்கள்.

இதுபற்றி, எந்தவோர் அரசியல் தலைவரும் பேசவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில், நெல்லுக்கான உத்தரவாத விலையொன்றை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுத்தோம். இன்று தாம் உற்பத்தி செய்துள்ள மரக்கறிகளைக்கூட, நல்ல விலைக்கு விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

வடக்கில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படியாக, வடக்குக்கென்று எதையும் செய்துகொடுக்கவில்லை. ஜப்பான் உதவியுடன், வடக்கின் வைத்தியசாலையைப் புனரமைத்துக் கொடுத்தேன். கொழும்பிலுள்ள வைத்தியசாலையிலும் பார்க்க, அங்கு பல வசதிகள் உள்ளன. இப்படியாக, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து​ கொடுத்துள்ளோம். ஆனால், இந்த அரசாங்கம் எதைச் செய்துள்ளது.

பாடசாலைகள், விஞ்ஞானகூடம் போன்றவற்றைக் கொடுத்தோம். யுத்தத்தால் பல ஆண்டு பின்னோக்கி நகர்ந்த பிரதேசம் முன்​னேற வேண்டுமாயின், இவ்வாறான வசதிகளைக் கொடுத்துதான், அங்கிருக்கும் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். அப்போது, சரியானவர் யார், தவறானவர் யாரென்ப​தை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

கே: தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, உங்களுடைய தரப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் உங்கள் சகோதரரைப் பார்த்தால் பயப்படுகிறார்கள். அந்த அச்சநிலையைப் போக்குவதற்கான உங்கள் தரப்பு நடவடிக்கைகள் என்ன?

உண்மையில், இந்தக் “கோட்டா பயம்” என்பது, தவறான கண்ணோட்டமாகும். யுத்தத்துக்குப் பின்னர் உருவாக்கி விடப்பட்ட பொய்ப் பிரசாரமே இந்தக் “கோட்டா பயம்” ஆகும். கோட்டாபய வருகிறார் என்ற அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவர் மீதான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அதுவரையில், அவர் பற்றிய அச்சம் இருக்கவில்லை.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற சில திருமண வைபவங்கள், மரணச் சடங்குகளிலும் கோட்டாபய பங்கேற்றிருந்தார். அப்போது, கோட்டாபய யாரெனத் தெரியாததால் அவர் பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இன்று, கோட்டாபய தான் வேட்பாளர் என்ற நிலை வந்ததும், அவரைப் பார்த்து பலரும் அச்சப்படுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கி விடப்பட்டதே இந்த கோட்டா பயமாகும். அதனால் எவருக்கும், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, “கோட்டா பயம்” தேவையில்லை. நானும் அவர் கூடவேதான் இருக்கப்போகிறேன். அதனால், எவரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.

உண்மையில் இந்தப் பயம், மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானால்தான் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டில், பயங்கரவாதம் தலைதூக்குமாயின், அந்தப் பயங்கரவாதியைப் பாதுகாக்க, எவரும் விரும்பமாட்டார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு, அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டு, தமது முஸ்லிம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள்? அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள், அரசாங்கத்தைக் காப்பாற்றினார்கள், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், மக்களுக்குத் தேவையானது எதுவெனப் பார்த்து, அரசாங்கத்தினூடாக அவற்றைச் செய்துகொடுக்கவில்லை.

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு பிரச்சினைகள் உள்ளன, பட்டாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இவை பற்றி அவர்கள் பேசவில்லை.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதை விடுத்து, அரசமைப்பு உருவாக்குவது பற்றி மட்டுமே பேசினார்கள். கூட்டமைப்பினர் அவர்களுக்கான கடமைகளைச் செய்யவில்லை என்று அதனால்தான் சொல்கிறேன். இதற்கு, கூட்டமைப்பினரே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் அவர்களுடைய மக்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதை, குற்றச்சாட்டாகவே நான் முன்வைக்கிறேன்.

கே:. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா?

ஆம். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். முதலில், கோட்டாபயவை அந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கொழும்பிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள், அவரை அறிவார்கள். அதனால் கொழும்பிலுள்ளவர்களுக்கு அவரைப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி, அவர் மீதுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும்.

இப்படியாக, மக்கள் மத்தியில் சென்று, மக்கள் ஆதரவைத் திரட்டுவோம். காரணம், என்மீது தமிழ் மக்களுக்கு அன்பு இருக்கிறது. அதை நான் நம்புகிறேன். அதனால், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள். அந்த ஆதரவை, என் சகோதரனுக்கும் அவர்கள் வழங்குவார்கள். ஆனால், ஊழலின்றி, அபிவிருத்திகளைச் சரியாகச் செய்வதற்கு கோட்டாவே சிறந்தவர். அதை அவர் நிரூபித்தும் உள்ளார்.

கே: உங்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம், இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம், மக்கள் மீதான நெருக்கடி அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கான பதில் என்ன?

இது பொய்ப் பயம். இராணுவ முகாம்களோ இராணுவத்தினரோ அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம், இப்போதைக்கே வடக்கு, கிழக்கிலுள்ள முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும், வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதனால், அதுபற்றி அச்சம் தேவையில்லை. தேசியப் பாதுகாப்புக்கு மேலதிகமாக, எந்தப் படையும் நிலைநிறுத்தப்படாது.

இராணுவம் என்பது, சிங்கள இராணுவம் அல்ல. இது, இந்த நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்புக்காக உள்ள படையாகும். அந்தப் படை, அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே பணியாற்றும். தவிர, தமக்குத் தேவையான மாதரி பணியாற்ற, இராணுவத்துக்கோ பாதுகாப்புப் படையினருக்கோ அதிகாரம் இல்லை.

கே: அப்படியானால், படை அதிகரிப்போ, முகாம் அதிகரிப்போ மேற்கொள்ளப்பட மாட்டாதென, உங்களால் உறுதியளிக்க முடி​யுமா?

ஆம், பொதுமக்களுக்கு இடையூறாக, வடக்கில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை உருவாக்க மாட்டோம். அதை நிச்சயமாக என்னால் கூறிக்கொள்ள முடியும்.

கே: நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, 6 மாதக் காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்படுமென்று டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார். இது சாத்தியமா?

கொடுக்க முடிந்தால் நாம் கொடுப்போம். காரணம், இதுபற்றி நாம் பேசவேண்டும். உடனடியாக, சரி கொடுப்போம் என்று கூறிவிட முடியாது.

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எனக்கு வாக்களிக்காமல், என்னிடம் அந்தத் தீர்வை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும்.

தவிர, எங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், எங்களுடன் இணைந்து ​ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம்.

கே: நீங்கள் என்னதான் வாக்குறுதிகளை வழங்கினாலும், மீண்டும் தாம் ஏமாற்றப்படுவோம் என்ற எண்ணமே இப்போது தமிழ் மக்களுக்கு உள்ளது. அந்த எண்ணத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யவுள்ளீர்கள்?

வாக்குறுதியளித்துவிட்டு, எதை நாம் செய்யாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கூறுங்கள். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் 99 சதவீதமானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவில்லை.

தெற்கிலுள்ள மக்கள், எனக்கு முதன்முறையாக வாக்களிக்கும் போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றுதான் கோரினார்கள். அதை நான் நிறைவேற்றினேன். அந்த நம்பிக்கையில் தான், இரண்டாவது முறையாகவும் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததால் தானே, இன்று தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாவிட்டால், எத்தனை உயிர்களை இந்த யுத்தம் காவுகொண்டிருக்கும்.

தமிழ் மக்கள் மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் அனைவரும், இந்த யுத்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதனால் நான் உறுதியாகக் கூறுவதென்னவென்றால், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

கே: மலையத் தமிழ் மக்கள் குறித்த பிரச்சினைகளுக்கான ​உங்களுடைய வேலைத்திட்டங்கள் என்ன?

உண்மையில், மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். அங்கிருந்து வரும் இளைஞர் – யுவதிகள், புதிய வேலைவாய்ப்புகளை நோக்கி நகர வேண்டும். அதற்காக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாடசாலைக் கல்வி முறைகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கான புதிய கல்வித் திட்டங்களைப் புகுத்த வேண்டியது கட்டாயம்.

மலையக மக்கள், எப்போது தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றங்காண வேண்டும். அம்மக்களுடைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவர்களுக்கென்ற நிலையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதை வழங்க வேண்டுமாயின், தேயிலைத் தோட்டங்கள் இலாபம் பெறுவனவாக மாற வேண்டும். அதற்கு, தேயிலைகளின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதன்மூலமே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதனால், அவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்படும்.