எந்த வகையிலேனும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைக் கைப்பற்ற முயலும் பௌத்த துறவிகள்

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதிதாக ஓர் சர்ச்சை வெடித்திருக்கின்றது. பிள்ளையார் ஆலய வளவில் அத்துமீறி குடியிருந்த பௌத்த துறவி புற்றுநோயால் மரணமடைந்ததையடுத்து, அவரின் சடலம் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆலய வளாகத்தில் புதைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை முடிவடைந்து சில மாதங்களே ஆகும் இவ்வேளை மீண்டும் ஓர் பிரச்சினை கிளம்பியுள்ளது.

குறித்த ஆலய வளாகத்திற்கு தென்பகுதியிலிருந்து விஜயம் செய்த பிக்குமார் 30 பேர், அந்த இடத்தில் தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாகவும், அந்த இடத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் கையகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு எதிர்த் திசையிலிருக்கும் இராணுவ முகாமில் தொல்பொருள் சிதைவுகள் சில காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை தென்பகுதியிலிருந்து வருகின்ற பௌத்த மதகுருமாரும், தென் பகுதி மக்களுமே பார்வையிட முடியும் மற்றயவர்கள் அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

குறித்த ஆலய வளாகத்தைச் சுற்றியிருக்கும் பிரதேசத்திற்குள் தொல்பொருள் திணைக்களம் தமது அடையாள கற்களை நாட்டியுள்ளது.

பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரோ, இவை இதுவரை காலமும் எமது பிரதேசத்தில் காணப்படவில்லை என்றும், இவை திட்டமிட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

இதன் ஊடாக இந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையாக அமைந்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது என்றும் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.

Neera2 எந்த வகையிலேனும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைக் கைப்பற்ற முயலும் பௌத்த துறவிகள்இதற்கிடையில்,  பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் பௌத்த பிக்குவின் சடலத்தை எரிப்பதற்குக் காரணமாக இருந்த, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் யார் ஆட்சிக்கு வந்தாலும் தான் முல்லைத்தீவில் சென்று குடியேறுவதை தடுக்க முடியாது என்று சூழுரைத்துள்ளார்.

கொழும்பில் இன்று(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் என்பதால் தாம் அமைதி முறையை கடைப்பிடிப்பதாகவும் கூறிய அவர், வடக்கில் தற்போது தனி அரசாங்கம் காணப்படுவதாகவும், பிரிவினைவாதத்தை வளர்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை தமக்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனி நாடு பற்றி பேசி சட்டத்தை தங்கள் இஸ்டத்திற்கு அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும், குருகந்த விகாராதிபதியின் இறுதிக் கிரியைகளை கூட்டமைப்பின சில அரசியல்வாதிகளே குழப்பியதாகவும், அங்கிருந்த தமிழ் சகோதரர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தாம் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு அநுராதபுரத்திற்கு அப்பால் சென்றவுடன் தனிநாடு பற்றி பேசுவது எந்த வகையில் நியாயமாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்தப் பிரச்சினையைப் பார்க்கும் போது, இனவாத சிங்கள அரசு தாங்கள் நேரடியாக ஆக்கிரமிக்க முடியாத தமிழர் பிரதேசங்களில் பௌத்த துறவிகளை வைத்து சூறையாடும் நோக்கோடனேயே இவ்வாறான சம்பவங்களை நிறைவேற்றி வருகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது.

பௌத்த துறவிகள் சிங்கள மக்களுக்கு வணக்கத்திற்குரியவர்கள். ஆனால் அவர்களே இனவாத கருத்தை முழுமையாக மக்களிடம் விதைப்பவர்களாக இருக்கின்றனர். எப்படியாவது நாட்டை முழுமையாக சிங்கள மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றே செயற்படுபவர்கள்.

அரசாங்கம் (அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி) சாதிக்க முடியாதவற்றை பௌத்த துறவிகளை வைத்து சாதிக்கும் நோக்கம் கொண்டுள்ளது என மக்கள் எண்ணுகின்றனர்.