எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இல்லை – சீன அதிபர்

எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் எண்ணம் இல்லை. அத்துடன் நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினைக் கோரவில்லை.  விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

ஐ.நா. சபையின் 75ஆவது ஆண்டு தினத்தை நினைவுகூரும் வகையில் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், ஐ.நா. சபைத் தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. காணொளி காட்சி வழியே பங்குபற்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பலநாட்டு தலைவர்களும் உரையாற்றி வருகின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிகழ்சியில்  இன்று(22) உரையாற்றினார்.  அவர் தனது உரையில்,  உலகில் மிகப் பெரிய வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது. அமைதி, வெளிப்படைத் தன்மை,  ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினைக் கோரவில்லை. விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை. மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை வழியே சுமுகமாக தீர்க்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றும் கூறினார்.