எதியோப்பியாவில் அரசிற்கெதிரான போராட்டத்தில் 80பேர் பலி

ஆபிரிக்க நாடான எதியோப்பியாவில் அரசிற்கு எதிரான போராட்டத்தில் 80பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் அபி அகமத் அரசியல் சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிராகக் கலவரம் வெடித்துள்ளது.

பிரதமர் அபி அகமத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டம் தற்போது இனக் கலவரமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து உள்ளுர் ஊடகங்கள் “எதியோப்பியாவில் ஒரோமியா பகுதியில் இனக்குழுக்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சமூக ஆர்வலர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்று புகார் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டிருந்தது.

எதியோப்பியாவில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் அபி அகமத் செய்தித் தொடர்பாளர் பில்லீன் சயோம் கூறும் போது, “வன்முறை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது. மேலும் 409பேர் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்றார்.

அபி அகமத் கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பல்வேறு சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளை எதியோப்பியாவில் எடுத்து வந்தார். முடக்கப்பட்ட ஏராளமான தொலைக்காட்சி சனல்கள், இணையத்தளங்கள் மீதான தடையை நீக்கினார். மேலும், சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை விடுதலை செய்தார்.

எதியோப்பியாவில் மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவராக வளர்ந்து வரும் அபி அகமத் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.