எதற்காக கற்கின்றோம்? கல்வியின் நிலை என்ன?-அபிலா சாம்பசிவம் (கிழக்கு பல்கலைக்கழகம்)

இளமையில் கல்வி சிலையில் எழுத்து, கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு,செல்வத்துட் சிறந்த செல்வம் கல்வி என்றெல்லாம் எமது முன்னோர்கள் கல்வியின் மகத்துவத்தை விளக்கியிருக்கிறார்கள். எமது நாட்டில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலவசக்கல்வி கிடைக்கின்றது. அது இலவசமாக கிடைப்பதனால்தான் என்னவோ அதன் அருமை நமக்கு புரிவதில்லை.

பணம் கொடுத்து புத்தகம் வாங்கி,பாடசாலை சீருடை வாங்கிய அந்த காலத்திலேயே கல்வி அர்த்தமாக உணர்வாக உள்வாங்கப்பட்டது ஆனால் இக்காலக் கல்வியின் நிலைதான் என்ன?

எந்தவிதமான தொலைத்தொடர்புகளோ, நவீன தொழில்நுட்பங்களோ இல்லாத காலத்திலே அறிவுப் புரட்சி சீராக நடைபெற்றது. இருந்தபோதும் இந்த நவீன யுகத்தில் எத்தனை வசதிகள் இருந்தும் கல்வியில் மாணவர்களின் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்று கூற வேண்டியுள்ளது. குடும்பத்தின் சூழ்நிலையினையும், கல்வியின் மகத்துவத்தினையும், சமூக சேவையினை நோக்காகக் கொண்டும் அனைத்தையும் வினைத்திறனாகப் பயன்படுத்தி வெற்றி பெறும் மாணவர்களும் உண்டு. இதனை இந்த வருடம் வெளியான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் முடிவுகள் எமக்கு புலப்படுத்தியது.

அதிகமாக கிராமப்புறங்களில் எவ்வித வசதிகளும் இல்லாமல் அனைத்தும் உணர்ந்து கற்கும் மாணவர்களே மாவட்ட ரீதியாகவும், தீவளாவிய ரீதியிலும் முதலாம், இரண்டாம்,மூன்றாம் நிலைகளை பெறுகின்றனர்.

அரச பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வியினை விட தனியார் துறைகளிடம் செல்லும் மாணவர்களின் தொகையும் அதிகரித்தே வருகின்றது. தரம் – 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராக்குவதிலிருந்து க.பொ.த (உயர்தரம்) வரைக்கும் மேலதிக வகுப்பிற்காக தனியார் மாணவர்கள் நாடிச் செல்கின்றனர். அதிகமான இடங்களில் சேவை நோக்கத்தினை விடவும் பணமே பிரதானமானதாக பார்க்கப்படுகிறது. கல்வியை வைத்து வியாபாரம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது.

இதற்கெல்லாம் காரணம் தான் யார்? அனைத்து பிழைகளையும் நாமே செய்து விட்டு பழியினை அடுத்தவர் மேலோ அரசாங்கத்தின் மேலோ சுமத்துகின்றோம். அடுத்தது மாணவர்கள் மத்தியில் கல்வியின் நிலை பின்தங்கி செல்வதற்கு நவீன கையடக்கத் தொலைபேசிகளும் காரணமாக அமைகின்றன.0 IJUgeL9kmFM0P1th எதற்காக கற்கின்றோம்? கல்வியின் நிலை என்ன?-அபிலா சாம்பசிவம் (கிழக்கு பல்கலைக்கழகம்)

இங்கு இடம் பெறுவது நேரத்திருட்டு. எமது பொன்னான நேரத்தை இதிலேயே அதிகம் செலவிட்டு மண்ணாக்குகின்றோம். காலையில் எழுந்ததும் பத்திரிகை படித்த காலம் சென்று தொலைபேசியின் திரையை வருடும் காலமாகிவிட்டது. தொலைபேசியை நாம் பயன்படுத்துகின்றோம் என்ற நிலை மாறி தொலைபேசியே நம்மை பயன்படுத்துகிறது என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு அதற்கு அடிமையாகி விட்டோம்.

நவீன தொழில்நுட்ப வசதிகளை கல்விக்காகவே பயன்படுத்தி வெற்றி கண்டவர்களும் கண்கூடாக காண்கிறோம். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நாமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர அதுவாக இருக்கக் கூடாது .

மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறன் இந்த காலத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஏராளமான நூலகங்கள் காணப்படுகிறது அங்கே விலைமதிக்க முடியாத பொக்கிஷமான எத்தனையோ நூல்களும் உண்டு. ஆனால் அதன் மீது தூசு படிந்திருப்பதைப் பார்க்கும்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று வெட்கித் தலைகுனிய வைக்கிறது. வாசிப்பதனால்தான் மனிதன் முழுமை பெறுகின்றான் என்பது முற்றிலும் உண்மையான கருத்து. ஆனால் இக்கால மாணவர்கள் அதை அறியாமல் அறியாமை எனும் இருளிலும் என்னால் எதுவுமே முடியாது என்ற எதிர்மறையான சிந்தனையிலும் இருக்கின்றனர்.

எமது நாட்டில் அரச பல்கலைக்கழகம்,உயர்கல்வி நிறுவனங்கள் ஆகிய பல்வேறு அமைப்புகள் உயர் கல்வியினை வழங்கி வருகின்றன. இருப்பினும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதில் பட்டதாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக கலைத் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்களே இந்த வகையில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.அண்மைக் காலமாக நாடளாவிய வகையில் இடம்பெற்றுவரும்   வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் இதற்குச் சான்றாகும்.IMG 0018 எதற்காக கற்கின்றோம்? கல்வியின் நிலை என்ன?-அபிலா சாம்பசிவம் (கிழக்கு பல்கலைக்கழகம்)

படித்து பட்டம் பெற்ற பின்னரும் தொழில் பெறுவது இவ்வளவு கடினமாக இருந்தால் எதற்கு இந்த பட்டப்படிப்பு? அப்போ அரச பல்கலைக்கழகங்கள் மாணவர்களை தொழிலிற்காக தயார்படுத்தவில்லையா?

மீன்களை மலை ஏறச் சொன்னால் அது ஏறாது திரும்பத் திரும்ப தோல்வியடைந்த வண்ணமே காணப்படும். ஏனென்றால் மீன்களுக்கு மலையேற தெரியாது நீந்த மட்டுமே தெரியும். ஆகவே ஒவ்வொரு மாணவனுக்கும் வெவ்வேறு விதமான திறமைகளே காணப்படுகின்றன. ஆனால் நமது நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியே வழங்கப்படுகிறது. அவர்களின் திறமைக்கேற்ப கல்வி பிரித்து கற்பிக்கப்படுவதில்லை.

என்னதான் மூன்று மொழி பேசுகின்ற மக்கள் நமது நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் பேசுகின்றவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படுவதில்லை .

அத்துடன் தொழில் வாய்ப்பை தட்டிக் கொள்வதற்கு ஆங்கில மொழி அறிவும், சிங்கள மொழி அறிவும், கணனி அறிவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அது எம்மிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அதிகமானோரிடம் இல்லை என்ற பதிலே இருக்கிறது.

ஆங்கில, கணினி,சிங்கள  அறிவை மேம்படுத்துவதற்கு எமது நாட்டில் பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாடசாலைகளிலும் கணனி கற்கைநெறிகள் நடாத்தப்படுகின்றன.

அத்தோடு பல்கலைக்கழகங்களிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் கட்டாயமாக் கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களும் இக் கற்கை நெறியை வழங்குகின்றன.மேலும் ஆங்கிலம், சிங்களம் என்பனவும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கைக்கும் மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர்கள் கிடைக்கக்கூடிய இந்த வசதிகளை பயன்படுத்தி தமது திறனாற்றலை வளர்த்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டவேண்டும்.

க.பொ.த (உயர்தரப்) பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகம், கல்வியற் கல்லூரி செல்லமுடியாதவர்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம் என எத்தனையோ வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அங்கு சென்று தமது திறமைகளை வெளிக்காட்டி தொழில் வாய்ப்பை பெறலாம். என்ன படிக்கிறோம் என்பதைத் தாண்டி எதற்காகப் படிக்கின்றோம் என்ற புரிதலுடன் செயற்பட்டால் மாத்திரமே வெற்றி பெறலாம் வாழ்வில்.

தடைக்கற்களை படிக்கற்களாக்கி வெற்றிப்பாதையில்பயணிப்போம் 

அபிலா சாம்பசிவம்,
02ம் வருட சிறப்பு கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.