உலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், கொ-ரோனா வைரஸ் நோயின் ஆரம்பத்தில் அது தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு வருடம்தோறும் 58 மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கிவருவதாகவும், அதனை அமெரிக்கா நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் ஆபிரிக்க இனத்தவரே அதிகம் பாதிக்கப்படுவதுடன் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை ஆபிரிக்க மக்களிடம் நீரழிவு, ஆஸ்த்துமா, உயர் குருதி அழுத்தம் ஆகிய நோய்கள் இருப்பதால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் தொற்றுநோய் தொடர்பான அதிகாரி கலாநிதி அந்தோனி போசி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்று அங்கு 1500 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இதுவரை அங்கு 12,746 பேர் மரணமடைந்துள்ளதுடன், 395,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.