உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் – வேல்முருகன்

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, நமது தொப்புள் கொடி உறவுகள் இலட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக் கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு பத்து ஆண்டுகளாகிவிட்டது.

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழர்களை முழுமையாக அழித்தொழித்து ஒட்டுமொத்த இலங்கை தீவையும் சிங்கள மயமாக்குவதற்கு சிங்கள இனவெறி அரசு அரங்கேற்றிய இனப்படுகொலையின் சாட்சியமாக முள்ளிவாய்க்கால் மண் விளங்குகிறது.

சர்வதேச போர் விதிமுறைகளுக்கு இலக்கணமாக தமிழர்களின் அறத்துடன் போர் புரிந்த தமிழீழ விடுதலை புலிகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசு 25க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு நீதிக்கு புறம்பாக முடக்கியதோடு இலட்சக்கணக்கான எமது ஈழத்து உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றுகுவித்த இந்த நாளை உலகத்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை நினைத்து பார்ப்பான்.

என் தொப்புள்க்கொடி உறவுகள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையு டனான வாழும் உரிமைக்காக எழுபது ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் சனநாயக போராட்டங்களை முடக்கிய சிங்கள பேரினவாதம் எண்பதுகளில் எனது சகோதர சகோதரிகளை ஆயுதமேந்துவதற்கு உந்தித் தள்ளியது என்பதே உலகறிந்த உண்மை.

இன வன்மமும், குரூர மனங்களையும் கொண்ட சிறீலாங்கா படைகள் தமிழனத்தின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை முன்னெடுத்தன. கொடூரங்களை அரங்கேற்றின. இறுதியாக முள்ளிவாய்க்காலிலேயே தமிழனத்தின் மீது ஒரு இனப்படுகொலையை சிறீலங்கா படைகளின் உதவியுடன் அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.

Velmurugan உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் - வேல்முருகன்இத்துடன் போர் முடிவுக்கு வருவதாக 2009 மே 18ஆம் நாள் அறிவித்து விட்டு தனது மிலேச்சத்தன இனப்படுகொலையை மறைத்து போரில் வெற்றி பெற்றுவிட்டோம், ஆயுத வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்று உலகம் முழுவதும் மார்பு தட்டியது.

தமது விடுதலைக்காக இலட்சக்கணக்கானவர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். எங்களின் உறவுகள் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும்போது அவர்களை சிறீலங்கா அரச படைகள் கொன்றொழித்து பத்தாண்டுகளாகின்ற போதும் அதற்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள். முகாம் வாழ்க்கை முற்றுப் பெறவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள்கதை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. சிறைகளில் சகோதரர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சிங்கள பேரினவாதிகள் எமது உறவுகளின் தாயக தேசத்திலே திட்டமிட்டு புத்த விகாரைகளை அமைக்கின்றது. காணிகளை கைப்பற்றி சிங்கள மக்களை குடியேற்றுகிறது. சிறிலாங்கா இராணுவம் எமது உறவுகளின் காணிகளையும், பண்ணைகளையும் வலிந்து பறித்து வைத்திருக்கின்றது.

தாயகம் எங்கும் சிறீலங்கா படைகள் நிலைகொண்டிருக்கின்றன. தமிழினத்திதை நசுக்குவதையே இலக்காக கொண்டு செயற்படுகின்றன. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் இன்னமும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எந்தெந்த வடிவங்களில் எல்லாம் முன்னெடுக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று பத்தாண்டுகளாகின்றன. அந்த நினைவேந்தல் தினத்தினை வெறுமனே உணர்வுகளுக்குள் மட்டுபடுத்தி நிறுத்திக் கொள்ளாது எமது தொப்புள்கொடி உறவுகள் சுயநிர்ணய உரிமைகளைப் பெற்று தாயகத்தின் தனது தேசிய அடையாளங்களுடன் வாழுவதற்கான இலக்கை அடைய உறுதியான நடவடிக்கைகளை தாயகத்திலும், தமிழகத்திலும் எடுக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதியெடுப்போமாக.